"தராகி" என்று உலகளவில் பேசப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் பதினெட்டாவது நினைவுதினம் இன்று (29-04-2023) சனிக்கிழமை மட்டக்களப்பில் நினைவேந்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் காந்தி பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபிக்கருகாமையில் இடம்பெற்றது.
இதன்போது மாமனிதர் சிவராமின் திருவுருவப் படத்திற்கான மலர் மாலையினை மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட ஊடகருமான பா.அரியநேத்திரன், சிரேஷ்ட ஊடகர் சிவம் பாக்கியநாதன் ஆகியோர் இணைந்து அணிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தினர். மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத் தொழில்சார் ஊடக சங்கம் ஆகியன இணைந்து நடத்திய இந்நினைவு தின நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன், சிவில் சமூக செயற்பாட்டளர் வி.லவக்குமார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.