200 ஆண்டுகளுக்கு முன் - கண்டுபிடிக்கப்பட்ட அரிய தமிழ்க் கல்வெட்டு!




யாழ்ப்பாண மாவட்டம் - சண்டிலிப்பாய் மேற்கு சொத்துப்புடிச்சி கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ஒன்றை அக்கிராம மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த விடம் சிறிய பற்றைகள் நிறைந்த ஒதுக்குப்புறமாக இருந்ததால் இக்கல்வெட்டுப் பற்றி மக்கள் முன்னர் அறிந்திருக்கவில்லை.

இருப்பினும், பிற தேவைக்காக கடந்த வாரம் இந்த விடத்தைத் துப்பரவு செய்த போது அழிவடைந்த கட்டிட அழிபாடுகளிடையே இக்கல்களை அடையாளம் கண்ட மக்கள் அது பற்றி தமது கிராம சேவக அதிகாரியிடம் தெரியப்படுத்தியிருந்தனர்.

இதைத் தெரிந்து கொண்ட யாழ்ப்பாணப் பிராந்தியத் தொல்லியல் திணைக்கழக அதிகாரிகளில் ஒருவரான திரு.விஸ்வலிங்கம் மணிமாறனும் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் கணேசலிங்கம் ஜெயதீஸ்வரனும் அவ்விடத்திற்குச் சென்று உரிய முறையில் இக்கல்வெட்டை மைப்பிரதி எடுத்து அதன் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிக்கொணர்துள்ளனர்.

ஏறத்தாழ மூன்றடி உயரமும் ஒரு அடி அகலமும் கொண்ட இக்கல்வெட்டு 10 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்னால் பொறிக்கப்பட்ட கல்வெட்டாக இருக்கலாம் என்பதை அவற்றின் எழுத்தமைதி கொண்டு உறுதிப்படுத்த முடிகின்றது.

இக்கல்வெட்டின் தொடக்கத்தில் காணப்படும் ஒம் என்ற மங்கல மொழியுடன் தொடங்கும் முதலிரு வரிகள் தேய்வடைந்த நிலையில் காணப்படுகின்றன. அவை கிராமத்தின் பண்டைய பெயரை அல்லது கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலத்தைக் குறிப்பதாக இருக்கலாம்.


ஏனைய வரிகளில் இப்பிரதேசத்தில் வாழ்ந்த சு.சபாபதிப்பிள்ளை என்ற பெரியவர் இக்கிராம மக்களினதும், கால்நடைகளினதும் நன்மை கருதி அமைக்கப்பட்ட வயற்கேணி மடம் பற்றிக் கூறியிருப்பதை இரு ஆய்வாளரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாசகம் உண்மையென்பதை இக்கல்வெட்டுடன் காணப்படும் பெரிய கேணி, ஆவுரஞ்சிகல் என்பன உறுதிப்படுத்துகின்றன. இவற்றுடன் மடமும், சுமைதாங்கியும் இருந்ததாக மக்கள் கூறும் செய்தியை அவ்விடத்தில் காணப்படும் கட்டிட அழிபாடுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

பேராசிரியர் புஸ்பரட்ணம் இக்கல்வெட்டின் முக்கியத்துவம் பற்றிக் கூறுகையில் யாழ்ப்பாணத்தில் வாகனப் போக்குவரத்துச் சாதனங்கள் பாவனைக்கு வருவதற்கு முன்னர் பண்டு தொட்டு மக்கள் கால் நடையாகவும், மாட்டு வண்டியிலுமே பயணம் செய்து வந்தனர்.

அவ்வாறு பயணம் செய்வோரின் நன்மை கருதி முக்கிய போக்கு வரத்து மையங்களில் சுமைதாங்கி, ஆவுரஞ்சிகல், மடம், கேணி அல்லது சிறு குளம் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இதை யாழில் பல இடங்களில் காணமுடிகின்றது.


இவற்றில் இருந்து யாழின் பண்டைய போக்கு வரத்துப் பாதைகளை அடையாளம் காணமுடிவதுடன் அவ்விடங்கள் அக்காலத்தில் சிறு வர்த்தக நகராகவும் இருந்ததை உறுதிப்படுத்த முடிகின்றது.


இந்த நிலையில் எனது மாணவர்கள் சண்டிலிப்பாய் மேற்கிலுள்ள சொத்துப்புடிச்சி கிராமத்தில் காணப்பட்ட கல்வெட்டை முறையாகப் படியெடுத்து அதைச் சரிவர வாசித்திருப்பதுடன் அதன் அருகில் இருக்கும் கேணி, ஆவுரச்சிகல் என்பவற்றையும் அடையாளப்படுத்தியுள்ளனர்.
புதியது பழையவை