50வது ஆண்டை பூர்த்திசெய்யும் - மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக்கழகம்!



இலங்கையில் மிகவும் பழமையான விளையாட்டுக்கழகங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தினால் குறித்த கழகத்தின் 50வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்கவுள்ளது.

இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் 50வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு சீருடை,தொப்பி அறிமுகம் மற்றும் இணையத்தள அங்குரார்ப்பணம்,பாடல்வெளியீடு என்பன மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

1972ஆம் ஆண்டு கோட்டைமுனை யுத் என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டுக்கழகம் பின்னாளில் கோட்டைமுனை விளையாட்டுக்கழகமாக கிழக்கு மாகாணத்தில் பல்வேறுவிதான சூழ்நிலைகள் நிலவிய காலப்பகுதியிலும் இளைஞர்களை உள்ளீர்த்து தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இளைஞர்களை கொண்டுசென்று வெற்றிவாகை சூடிய கழகமாகயிருந்துவருகின்றது.

இதன் 50வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில் அவற்றினை ஊடகவியலளார்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வுடன் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் தலைவர் சி.சடாட்சரராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வினை கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ்.ரஞ்சன் தொகுத்தளித்தார்.

இந்த நிகழ்வில் கழகத்தின் உபதலைவர் சி.தங்கராஜா,செயலாளர் ஜெயதாசன் உட்பட கழக முக்கியஸ்தர்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

இதன்போது கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் ஊடாக தேசிய கிரிக்கட் அணிக்கும் வீரர்களை கொண்டுசெல்லும் வகையில் சர்வதேச ரீதியான கிரிக்கட் பயிற்சியாளராக கடமையாற்றும் மலிங்க சொரபுலிகே இதன்போது அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.

இந்த நிகழ்வின்போது சர்வதேச ரீதியில் கோட்;டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்தரை மைதானத்தில் இடம்பெறும் விளையாட்டுகள் மற்றும் கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

அத்துடன் கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் தொடர்பான ரெப் பாடல் ஒன்றும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் ரீசேட் மற்றும் தொப்பி என்பனவும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அத்துடன் கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் 50வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெளிவுபடுத்தப்பட்டது.

கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ்.ரஞ்சன் இதன்போது கருத்து தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் தொண்டு நிதிக்கான நடைபவனியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இதன்மூலம் பெறப்படும் நிதியானது உதயம் விழிப்புலனற்றோர் அமைப்பு,ஹரி சிறுவர் இல்லம்,ஓசானம் சிறுவர் இல்லம் ஆகியவற்றிற்கு வழங்கப்படவுள்ளது.

அதேபோன்று கோட்டைமுனை விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்று கோட்டைமுனை விளையாட்டுக்கிராமத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சிரேஸ்ட வீரர்களைக்கொண்டு மறைந்த பீலிக்ஸ் அவர்களின் ஞாபகார்த்தமாக ஆறு கழகங்கள் பங்குகொள்ளும் வகையில் ரி20 சுற்றுப்போட்டியொன்றும் நடாத்தப்படவுள்ளது.

இதில் இரு கழகம் மட்டக்களப்பிலிருந்தும் ஏனையவை யாழ்ப்பாணம்,கண்டி,கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்தும் கழகங்கள் பங்குபற்றும். இதேபோன்று ஜுனியர் போட்டிகளாக மறைந்த வீரர் பிரகாஸ் ஞாபகார்த்தமாக நடைபெறவுள்ளது.



புதியது பழையவை