திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தினால் சுகாதார பிரச்சினை - மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்!மட்டக்களப்பு- மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு அமலபுரம் பகுதியில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தினால் அப்பகுதியில் உள்ள மக்கள் சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் நேற்று (17.04.2023) முன்னெடுக்கப்பட்டது.

திண்மக்கழிவு முகாமைத்துவம்
புதுக்குடியிருப்பு அமலபுரம் பகுதியில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் குடியமர்த்தப்பட்ட போது அப்பகுதியில் 2014ஆம் ஆண்டு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் அமைக்கப்பட்டு அங்கு கழிவுகள் சேகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அப்பகுதியில் பெறப்படும் கழிவுகள் மீள்சுழற்ச்சி செய்யப்பட்டு கூட்டுப்பசளை தயாரிக்கப்படும் எனவும் இதனால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது என உத்தரவாதம் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.


எனினும் குறித்த பகுதியில் கழிவுகள் கொட்டப்படும் இடமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருவதுடன் எந்தவித பசளை உற்பத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் விசனம்

அத்துடன் தமக்கான தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரையில் யாருக்கும் எந்தவித தொழிலும் வழங்கப்படவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் மக்களுக்கு தெரியாமல் மாமிச கழிவுகளையும் கொட்டுவதன் காரணமாக சுகாதாரத்திற்கு பாரிய தீங்குகள் ஏற்படுதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.அத்துடன் மாமிச கழிவுகளை புதைப்பதன் காரணமாக நிலக்கீழ் நீர் பாதிக்கப்படுவதாகவும் கிணறுகளின் நீர் பாதிக்கப்படுவதன் காரணமாக குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


மழை காலங்கள் குறித்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்குள்ளிருந்து வழிந்தோடும் வெள்ள நீர் மக்கள் குடியிருப்பு நோக்கிவருவதன் காரணமாக சுகாதாரம் தொடர்பிலான பாரிய பிரச்சினைகரளை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியை சேர்ந்த மக்கள் தோல் நோய் மற்றும் ஈக்களின் தொல்லைகளினால் பாதிக்கப்படுவதுடன் பல்வேறு தொற்று நோய்களினாலும் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதிகளின் கோரிக்கை;கு அமைவாக குறித்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் மாமிச கழிவுகளை கொட்டுவதை நிரந்தரமாக நிறுத்தியுள்ளதாகவும் குறித்த பகுதியில் சுகாதார பிரச்சினைகள் ஏற்படாத வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மண்முனைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் ஜோ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை