ஒரே நாளில் நான்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள்! வேறு தினத்திற்கு மாற்றியமைக்குமாறு - இரா. சாணக்கியன் கோரிக்கைபிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர்களிடம் ஒருமைப்பாடு இன்மையில் ஒரே நாளில் நான்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை நடாத்துவதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அக் கூட்டங்களை வேறு தினத்திற்கு மாற்றியமைக்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம்  கோரிக்கை விடுத்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக பிரதேச  ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடைபெறாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவது தொடர்பி‌ல் கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற மட்டக்களப்பு  மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்ததுடன், வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றிருந்தன. 

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் எதிர்வரும் 19.04.2023 ஆம் திகதி அன்று காலை மற்றும் மாலை வேளைகளில் இவ்விரு கூட்டங்களாக  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், இன்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதுடன் அக் கூட்டங்களை வேறு தினத்திற்கு மாற்றியமைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் அக் கடிதத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர்களிடம் ஒருமைப்பாடு இன்மையால் ஒரே நேரத்தில் இரு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் பிரதிநிதியாகிய தன்னால் குறித்த கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளதுடன், அக் கூட்டங்களை வேறு தினத்திற்கு மாற்றியமைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எதிர்வரும் 19ஆம் திகதி காலை 09.30 மணிக்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலக கூட்டம் நடைபெறவுள்ள அதே நேரம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டம் நாடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பிற்பகல் வேளையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் கூட்டம் நடைபெறவுள்ள அதேநேரத்தில் மண்முனை பற்று பிரதேச செயலகத்திலும் இக் கூட்டத்தினை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை