அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவருடன் - இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் முறுகல்!



மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவருடன் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் முரண்பாட்டில் ஈடுபட்டதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தரை கடமையை சரிவர செய்ய வேண்டும் என வலியுறுததியே இவ்வாறு முரண்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் வெகு நேரமாக தங்களது தேவைகளை நிறைவேற்றிகொள்வதற்காக பிரதேச செயலகத்தில் காக்க வைக்கப்பட்டதாகவும், அதனால் இராஜாங்க அமைச்சர் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் படி வலியுறுத்தியே அபிவிருத்தி உத்தியோகத்தருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகளினால் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் எமது செய்திச்சேவை இராஜாங்க அமைச்சரை தொடர்பு கொண்டு வினவியபோது, ‘‘ பெருமளவிலான மக்கள் காலையில் இருந்து பிரதேச செயலகம் ஊடாக விநியோகிக்கப்படும் அரிசிகளை பெற்றுகொள்வதற்காக வெகு நேரமாக காத்திருந்ததாகவும், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை விரைவாக முன்னெடுக்குமாறே தான் வலியுறுத்தியதாகவும்‘‘ இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அரசாங்க அதிகாரிகள் மக்களுக்கு சேவை வழங்குவதில் பராபட்சம் காட்டக்கூடாது எனவும், மக்களின் தேவைகளை உடனடியாக அரசாங்க அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் என்றே அவ்விடத்தில் இராஜாங்க அமைச்சர் ஆதங்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை