கப்பலில் ஐரோப்பாவிற்கு ரகசிய பயணம் - சிக்கிய இலங்கைத் தமிழர்கள்!



சூயஸ் கால்வாய் சோதனைச் சாவடியில் சரக்குக் கப்பலில் பயணித்த 4 இலங்கைத் தமிழர்கள் பிடிபட்டுள்ளனர்.

கப்பலின் பணியாளர்கள் போல் உடையணிந்து சரக்குக் கப்பலில் சட்டவிரோதமாக பயணித்த குறித்த 4 இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த நால்வரும் (திங்கட்கிழமை) இலங்கை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, காலி பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மார்ச் 24 அன்று கொழும்பு துறைமுகத்தில் இருந்து நான்கு பேரும் இரகசியமாக லைபீரிய கொடியுடன் கப்பலில் ஏறியுள்ளனர்.

கப்பல் மார்ச் 25 அன்று கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டு ஐரோப்பா நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.


இந்த கப்பல் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் நுழைந்தபோது, ​​கப்பலில் நான்கு பேர் சட்டவிரோதமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இது குறித்து கப்டனுக்கோ அல்லது கப்பலின் மற்ற ஊழியர்களுக்கோ தெரியாது.

கண்டுபிடிக்கப்பட்ட போது இலங்கை ஆண்கள் கப்பல் பணியாளர்கள் போல் உடை அணிந்திருந்தனர். இவர்கள் முல்லைத்தீவு, சுன்னாக்கம், ஊர்காவற்துறை மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் எவ்வாறு கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசித்தார்கள் மற்றும் கப்பலுக்குள் நுழைந்தனர் என்பது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நான்கு இலங்கையர்களுக்கு எதிராக மட்டுமன்றி அவர்களுக்கு உதவிய மற்றும் உறுதுணையாக இருந்த நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை