அன்னை பூபதியின் 35வது நினைவு தினம் மட்டக்களப்பில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.
அன்னை பூபதியின் நினைவுதின ஏற்பாட்டுக்குழுவால் மட்டக்களப்பில் அஞ்சலி நிகழ்வுகள் ஒருங்கமைக்கப்பட்டன.
அன்னை பூபதி உண்ணா நோன்பிருந்து உயிரிழந்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக நேற்று (19-04-2023) காலை முதல் பிற்பகல் வரை அடையாள
உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது.
அன்னை பூபதியின் ஆத்மசாந்தி வேண்டி திதிகொடுக்கும் நிகழ்வும் மாமாங்கேஸ்வரத்தில் இடம்பெற்று அன்னதானமும் வழங்கப்பட்டது.
அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய வாகன பேரணியான மாமாங்கேஸ்வரத்தில் இருந்து கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயம் வரை சென்றது.
அங்கிருந்து நடைபவனியாக நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதி வரையில் சென்று அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அன்னை பூபதியின் பிள்ளைகள், அன்னை பூபதியின் நினைவுதின ஏற்பாட்டுக்குழுவின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலரும் அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
நினைவிடத்தில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
அன்னை பூபதியின் நினைவுதின ஏற்பாட்டுக்குழுவின் உறுப்பினரும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றிய உறுப்பினருமான சிவஸ்ரீ முரசொலிமாறன்
தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வுகளில், அன்னை பூபதியின் நினைவுதினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டதுடன் வாகரை பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களுகடகு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.