மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
பிரதேச ஒருக்கிணைப்புக்குழுத் தலைவர் இராஜாங்க அமைச்சர் ச. வியாழேந்திரனின் தலைமையில் வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் வைத்து இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (20.04.2023) இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் விவசாயம் மீன்பிடி, வீடமைப்பு, மின்சாரம், கால்நடை, வீதி அபிவிருத்தி, கைத்தொழில், வங்கிச் சேவைகள், வன ஜீவராசிகள் பாதுகாப்பு, வனவளத்துறை, கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட பல திணைக்களங்கள் சார்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்
இதன்போது மண்டூர் - குருமண்வெளி ஓடத்துறைப் படகுப் போக்குவரத்திற்காக கடந்த 15ஆம் திகதி முதல் அறவீடு செய்யப்படும் பணத்தொகையை குறைத்து, கல்வி கற்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக அதில் பயணம் செய்ய அனுமதித்தல், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் அனைவரிடமும் 10 ரூபாய் மாத்திரம் அறவீடு செய்தல், பிரதேசத்தில் திரியும் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இழவயது திருமணங்களைக் கட்டுப்படுதுவதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்தல், அரச சார்பற்ற நிறுவனங்களை அழைத்து பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றிக் கலந்துரையாடுதல், உரிய நேரத்திற்கு, இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளைச் சேவையிலீடுபடச் செய்தல், அடுத்த இப்பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு கிராமிய மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை அழைத்தல், திக்கோடை கிராமத்தில் தனியார் ஒருவருக்கு கூட்டெரு உற்பத்திக்காக வழங்கப்பட்ட அரச காணியை அவரிடமிருந்து மீளப் பெற்று அக்கிராமத்தின் தேவைக்குப் பயன்படுத்துவதற்கு அனுமதித்தல், உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்த கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது