ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் சர்வதேசரீதியாக ஜனநாயக வழியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர், அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழீழ அரசியல் துறையினர் சர்வதேச ரீதியாக 8க்கும் மேற்பட்ட நாடுகளில் தமது பணிகளை முன்னெடுத்து வரும் இவ்வேளை, அவுஸ்திரேலியாவில் மக்கள் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு அவுஸ்திரேலியாவின் நியூசவுத்(NSW) மாநிலத்தில் உள்ள தூங்காபி (Toongabbie) நகரில் தமிழீழ அரசியல் துறையினரால் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
அவுஸ்திரேலியாவின் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் பரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பு அக வணக்கத்துடன் ஆரம்பமாகியது.
சந்திப்பின் போது அரசியல் துறையின் தொடர் பயணமும் அதன் தேவையும் மேலும் அரசியல் துறையின் தற்போதைய நிர்வாகப் பொறிமுறை பற்றி அருந்தவம்( மணி) அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.
தொடர்ந்து நடந்த கலந்துரையாடலின் போது, சந்திப்பில் கலந்து கொண்டிருந்த தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் உறவுகளின் கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டது.
இதில் குறிப்பாக தேசியம் சார்ந்து இயங்கும் கட்டமைப்புகளுடனான உறவு பற்றியும் அவர்களுக்கான ஒத்துழைப்பு பற்றியும் விரிவாக உரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் தமிழீழ அரசியல் துறையின் அவுஸ்திரேலியா நிர்வாக பொறுப்பாளர்கள் தேசிகன் மற்றும் ஜொனி போன்றவர்களின் கருத்துரைகளும் இடம்பெற்றன.
இச்சந்திப்பில் தேசிய செயற்பாட்டாளர்கள், உறவுகள் மட்டுமல்லாது, தமிழக உறவுகளும் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச பார்வையாளர்களாக அரசியல் துறையின் சர்வதேச பொறுப்பாளர்களும் இணைய வழியாக கலந்து கொண்டார்கள். இவ் மக்கள் சந்திப்பானது சிறப்புற அமைந்தது.