மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திற்குள் புகையிரத கடவை காப்பாளர்கள் முன்னெடுத்தெடுத்த போராட்டம் பொலிஸார் நடாத்திய பேச்சு வார்த்தையினையடுத்து நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
சம்பள அதிகரிப்பு, நிரந்தர நியமனம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட-கிழக்கு மாகாண புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திற்குள் புகையிரதங்களுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பில் புகையிரத கடவை காப்பாளர்களாக கடமையாற்றும் ஊழியர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். பல்வேறு சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் புகையிரத கடவை காப்பாளர்கள் ஈடுபட்டனர்.
நாட்டில் பொருளாதார சுமைகள் காரணமாக மக்கள் தினமும் கஸ்டங்களை எதிநோக்கிவரும் நிலையில் கடந்த பத்து வருடங்களாக மாதாந்தம் 7 ஆயிரத்து 500ரூபா சம்பளத்திற்கே தாங்கள் கடமையாற்றிவருவதாக கடவை காப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2013ஆம் ஆண்டு தாங்கள் பொலிஸ் திணைக்களம் ஊடாக புகையிரத கடவை காப்பாளர்கள் நியமனங்களுக்குள் உள்வாங்கப்பட்டதாகவும் மூன்று மாதங்களுக்கு நாள் சம்பளமாக 250ரூபாவும் மூன்று மாதங்களுக்கு பின்னர் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்பதுடன் ஆறு மாதங்களில் நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்கப்படுவீர்கள் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டடே நியமனம் வழங்கப் பட்டதென்றும், ஆனால் இதுவரை அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
போராட்ட இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்களை நாடெங்கிலும் முன்னெடுக்கவுள்ளதாகவும் புகையிரத கடவை காப்பாளர்கள்
தெரிவித்தனர்.
நிரந்தர நியமனம் தருமாறு கோரி பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்று வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை வாழைச்சேனை புகையிர நிலையத்தில் ஒன்று கூடியவர்கள் தங்களது கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறு வாழைச்சேனை பிரதான கொழும்பு வீதி வழியாக ஊர்வலமாக நடந்து வந்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நின்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசே நிரந்தர நியமனத்தை தா, சம்;பளத்தினை அதிகரித்து தா போன்ற கோரிக்கைகள் அடங்கிய கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.
தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை தீர்வு பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியிடம் கையளித்தனர்.
மகஜரை பெற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இதற்கான தீர்வினை சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாக இதன்போது தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான 26 புகையிரத கடவவையில் 78 பேர் கடமை பரிந்து வருக்கின்றனர். கடந்த 2013.7.11 ஆம் திகதி சேவைக்கால அடிப்படையில் பொலிஸ் திணைக்களத்தினால் வேலைக்கு இவர்கள் அமர்த்தப்பட்டனர். நாளொன்றுக்கு 8 மணித்தியாலம் பணியாற்றி மாதாந்த சம்பளமாக ரூபா 7500 பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.