மின் கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புமின் கட்டண குறைப்பு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (24.05.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரக் கட்டணங்கள்
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் வீட்டுப் பாவனை மின்சாரக் கட்டணங்கள் 23 சதவீதத்தால் குறைக்கப்படும்.

அத்துடன், வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணங்கள் 23 சதவீதத்தாலும் உல்லாச விடுதிகளுக்கான மின் கட்டணங்கள் 40 சதவீதத்தாலும் குறைக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மின் கட்டண திருத்தத்தின் விலை பட்டியலை அமைச்சர் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதன்படி, 0 - 30 வரையான அலகுக்கான விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, அலகொன்றின் விலை 25ஆக புதிய திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், மின்சாரக் கட்டணத்தில் முதலாம் பிரிவினருக்கு குறைந்த பட்சம் 23% சலுகை வழங்கப்படவுள்ளதுடன், இந்த சலுகையை 1,744,000 குடும்பங்கள் பெற்றுக்கொள்ளும். 31 - 60 அலகுகளுக்கு 9% மற்றும் 0 - 60 அலகுகளுக்கு 7% மின் கட்டணம் குறைப்பை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.

0 - 30 அலகுகள் வரை பயன்படுத்தும் 15,646 மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தை 23%ஆக குறைக்கவும், 31 - 60 அலகுகள் வரை பயன்படுத்தும் 10,692 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 7% மின் கட்டணத்தை குறைக்கவும், உணவக பிரிவினருக்கு 29% முதல் 40% வரை மின்சார கட்டணத்தை குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
புதியது பழையவை