ஊடகவியலாளர் பாக்கியராசா மோகனதாஸின் ஓராண்டு நினைவஞ்சலி மற்றும் ஆத்மசாந்தி நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை(12)அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பாக்கியராசா மோகனதாஸின் ஓராண்டு நினைவஞ்சலி மற்றும் ஆத்மசாந்தி நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை(12-05-2023) அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த 2022.4.23 திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள துறைநீலாவணையைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளரும்,கலைஞரும்,எழுத்தாளரும் பன்மைத்துவ ஆளுமையாளரும்,ஆசிரியருமான பாக்கியராசா மோகனதாஸ் உயிரிழந்து கடந்த 2023.4.23 திகதியுடன் ஓராண்டை எட்டியுள்ளது.
இதனை முன்னிட்டு அன்னாரின் குடும்பத்தாரின் ஏற்பாட்டில் ஓராண்டு ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வுகள் இன்றையதினம் அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
இவர் தினகரன்,வீரகேசரி,தினக்குரல்,தமிழன்,தமிழ்மிரர்,தமிழ்தந்தி போன்ற பத்திரிகைகளிலும்,இணையத்தளங்களிலும் ஊடகவியலாளராக 9 வருடங்கள் பேனாமுனையில் செய்திகளையும்,கலை இலக்கிய கட்டுரைகளையும் எழுதிக்குவித்தார்.
அதுமட்டுமல்ல வடக்கு,கிழக்கு,மலையகம்,கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைகள்,குறைபாடுகளை எழுதி அதற்கு தீர்க்கமான தீர்வுகளை பெற்றுக்கொடுத்து மக்களின் மனம் கவர்ந்த ஊடகவியலாளராக இவர் திகழ்ந்தார்.
பாக்கியராசா மோகனதாஸ் நிச்சயமாக ஒரு ஊடகத்துறை என்ற வட்டத்தினுள் மட்டும் இல்லாமல் மாறாக ஒரு நல்ல வாசகனாக, நடிகனாக,கலைஞனாக,இலக்கிய எழுத்தாளனாக, விமர்சனாக போன்ற பரிமாணங்களை உடையவராக திகழ்ந்து அனைவரின் எண்ணங்களையும் வசீகரித்துக்கொண்ட ஒரு பண்பாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் இலக்கியத்திறமை மற்றும் எழுத்துத்திறமைக்கு 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் இளம் கலைஞர் விருது வழங்கி கௌரவித்தமை இவருடைய கலை இலக்கியத்திறமைக்கு வழங்கப்பட்ட கௌரவமாகும்.
