தீயில் கருகிய தமிழர் பொக்கிசம் - 42 ஆண்டுகளைக் கடக்கிறது!



தமிழரின் வரலாற்று தொன்மையும், காலம் கடந்த பொக்கிஷங்களையும் கொண்டிருந்த யாழ். நூலகத்தின் எரிப்பு என்பது ஒரு சாதாரணமான வன்முறை செயல் இல்லை.

தமிழினத்தின் அடையாளத்தை அழிப்பதற்காக வேண்டும் என்றே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஓர் இனவாத அரசியல் நாடகம்.

தமிழ் மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, அறிவியல் ஆகிய அம்சங்களை சிறிலங்கா அரசாங்கமே அழித்து முடித்த நாள் இன்று.


தெற்காசியாவின் மிகப்பெரிய அறிவுக் களஞ்சியமாக திகழ்ந்த யாழ். பொது நூலகத்தை சிங்கள இனவாதிகள் எரித்து நாசமாக்கிய 42 ஆவது ஆண்டு துயரநாள் இன்று.

42 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ். பொது நூலகமானது தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாக, சுமார் 1 இலட்சத்துக்கும் அதிகமான நூல்கள், ஓலைச்சுவடிகள், பழமையான தமிழர் நூல்கள் என நிறைந்த தமிழரின் அறிவுச் சுரங்கமாக இருந்தது.



தமிழர்களுக்கு மட்டுமல்ல, தென்னாசியாவின் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்ந்தது அன்று.

நூலக வரலாறு 1933 ஆம் ஆண்டு மு. செல்லப்பாவால் தொடங்கப்பட்டு, படிப்படியாக உருவாக்கப்பட்டு தென்னாசியாவின் பிரம்மிக்கத்தக்க நூலகமாக வளர்ச்சி கண்டிருந்தது.

யாழ். பொது நூலகமானது 1959 ஆம் ஆண்டு யாழ். மாநகர மேயர் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்டது.

செழிப்பாக வளர்ச்சி கண்டிருந்த அறிவுப் பொக்கிஷத்தை 42 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள ஆட்சியாளர்களும், இனவெறியாளர்களும் சேர்ந்து தீயிட்டு எரித்தனர்.

பல ஆயிரம் நூல்கள் எரிந்து நாசமாகியதுடன், பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு நூலாசியர்களினால் எழுதப்பட்ட நூல்கள் பலவும் எரிந்து நாசமாக்கப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டில் தமிழர் தாயகம் முழுவதும் நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளில் யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்ட கொடூர சம்பவமும் அரங்கேறியிருந்தது.

வரலாற்று தொன்மையான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட கொடூரத்தை நேரில் பார்த்த தனிநாயகம் அடிகளார் அவர்கள் மாரடைப்பால் தன் உயிரை விட்டார்.



வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். பொது நூலகம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருந்தாலும், தமிழர்களின் அடையாளத்தின் பொக்கிஷங்கள் பல எரித்து இல்லாமல் ஆக்கப்பட்டமை இன்றும் உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, மறக்கமுடியாத வடுவாகவே உள்ளது.
புதியது பழையவை