இலங்கையில் இருந்து 100,000 டோக் குரங்குகளை பெற்றுக்கொள்வதில் சீன நிறுவனம் தற்போதும் ஆர்வமாகவே உள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு 100,000 டோக் குரங்குகளை ஏற்றுமதி செய்யுமாறு சீன நிறுவனம் ஒன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவதானிக்கப்பட்டுள்ள அதேவேளை, இது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
"இருப்பினும், பல சுற்றுச்சூழல் அமைப்புகள் குரங்குகள் சீனாவிற்கு உணவாக ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறி இந்த விடயத்தில் கவலைகளை எழுப்பின. இந்த விவகாரத்தில் இலங்கையில் உள்ள சீன தூதரகமும் கடும் பின்னடைவை எதிர்கொண்டது,” என்றார்.
இலங்கையில் இருந்து குரங்குகளை பெற்றுக்கொள்வதில் சீன நிறுவனம் தொடர்ந்தும் ஆர்வமாக உள்ளதால், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்துடன் கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் அமரவீர மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், உத்தேச திட்டத்திற்கு எதிராக சுற்றாடல் ஆர்வலர்கள் தற்போது இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். “நாட்டில் எதிர்கொள்ளும் பெரிய அளவிலான பயிர் அழிவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வதே சாத்தியமான தீர்வாக அதிகாரிகள் கருதுகின்றனர். இது ஒரு முழுமையான தீர்வு அல்ல, ஆனால் ஒரு விருப்பம், ”என்று அவர் மேலும் கூறினார்.