தந்தையின் தாகம் தீர்க்க இளநீர் பறிக்க தென்னைமரத்தில் ஏறிய மகன் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழப்பு!



தந்தையின் தாகம் தீர்க்க தென்னை மரத்திலேறிய மகன் தவறி விழுந்து உயிரிழந்த  சம்பவம் மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவு, சித்தாண்டியில் பதிவாகியுள்ளது.

தந்தையும் மகனும் சித்தாண்டியிலுள்ள தனது உறவினர் ஒருவரது மரக்கறி விற்பனை நிலையத்தில் தொழில் நிமிர்த்தம் நின்ற வேளை, கடந்த 09.06.2023ம் திகதி வெள்ளியன்று மதிய நேரம் தனது தந்தைக்கு உடற்சோர்வுடன் களைப்பும் ஏற்பட்டதால் "தாகத்தை தணிக்க அருகிலுள்ள சுமார் 20 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் இளனி ஆய்ந்து கொடுப்பதற்காக மகன் ஏறிய போது, தந்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே மகன் தவறி விழுந்து உணர்விழந்துள்ளார்.

உடனடியாக மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (11) மாலை மரணமானார்.

சந்திவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளையேற்று மரண விசாரணைகளை முன்னெடுக்க இன்று (12/06/2023) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் சடலத்தை பார்வையிட்டபோது, வெளிக்காயங்கள் எதுவுமில்லாததால் உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனை முடிவில் "தலையும் கழுத்தும் பலமாக தாக்குண்டு மூளை வீக்கமடைந்து உள்ளக இரத்தக்கசிவும் ஏற்பட்டதால் மரணம் சம்பவித்திருப்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறு மரணமடைந்த முருகன் கோயில் வீதி, சித்தாண்டி -2 ஐச்சேர்ந்த விஜயகுமார் தனுஷன் (21) என்ற இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதியது பழையவை