மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்குமான குடிநீர் விநியோகம் பூர்த்திசெய்யப்படும்!நீண்டகாலமாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரிய ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி பகுதியில் குடிநீர் இணைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு நேற்றையதினம் (27.06.2023) இடம்பெற்றுள்ளது.

நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


மயிலம்பாவெளி பகுதியில் குடிநீர் இணைப்பு இதுவரை கிடைக்கப்பெறாத பகுதிகளுக்கானசுமார் 2 கிலோமீட்டர் நீள குடிநீர் வழங்கும் நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உரையாற்றுகையில்,

பொருளாதார பிரச்சினைகள்
நமது மாவட்டத்தில் மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளில் குடிநீர் பிரச்சினையும் ஒன்று. சுத்தமான குடிநீரை வழங்குகின்ற இச்செயற்றிட்டம் இப்பொழுது மாவட்டத்திலே குடிநீர் இணைப்பு இல்லாத இடங்களுக்கும் குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த வருடம் அல்லது வருகின்ற வருடத்திற்குள் மாவட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் இருக்கின்ற 55 பகுதிகளில் குடிநீர் இணைப்பை வழங்க வேண்டும்.


திராய்மடு தொடக்கம் புன்னைகுடா வரையிலான பகுதிகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான செயல்திட்டம் பொருளாதார பிரச்சினை போன்ற பல காரணங்களினால் பிற்போடப்பட்டிருந்தது.


நமது மாவட்ட நீர்ப்பாசன முகாமையாளர் இத்திட்டத்தினை அமைச்சு மட்டத்தில் பேசி விரைவாக கொண்டு வர வேண்டும் என கூறியிருந்தார்.

மிக விரைவில் தீர்வு 
இதற்கு அமைவாக ஜீவன் தொண்டமானோடு இத்திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என நான் கூறிய இந்த வேலை திட்டத்தினை விரைவாக ஆரம்பிப்பதற்கு அவர் உதவி புரிந்திருக்கின்றார்.

ஆகவே இந்த இடத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி கூறுகிறேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வரை குடிநீர் இணைப்புகள் இல்லாத இடங்களுக்காக குடிநீர் இணைப்புகளை மிக விரைவில் வழங்குவோம் என தெரிவித்துள்ளார். 


இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் நீர்வழங்கல் திணைக்கள அதிகாரிகள், கிராமசேவகர், கட்சியின் இணைப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
புதியது பழையவை