ஆடிப்பிறப்பு நாளில் வெளிவரும் அமுக்கப்பட்ட உண்மைகள்!
இன்று ஆடிப்பிறப்பு!
"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே"
      என்று ஆரம்பிக்கும் சிறுவர் பாடல் முன்னைய பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருந்தது. தமிழர்களால் கொண்டாடப்பட்ட இந்நாளை 2009 இன் பின்னர் பொதுவாகத் தமிழர் பேசும் கட்சிகள் மறந்து விட்டன.

முன்னர் காவலரண்களில் இருந்த போராளிகளுக்கும் அந்தந்தப் பகுதி மக்கள் கூழும்,கொழுக்கட்டையும் கொடுத்து அன்பைப் பரிமாறினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ?
     

எப்படியிருந்தாலும் தமிழ்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன் அவர்கள் இந்த மரபினை அழிந்து விடாமல் காக்கும் முயற்சிகளை தன்னாலியன்ற வரை முன்னெடுத்து வருகிறார். இந்த ஆண்டு (2023) அராலி தெற்கு களவுத்துறை விளையாட்டு மைதானத்தில் அந்தக்கிராம மக்களின் பங்கெடுப்புடன் கொழுக்கட்டை, கூழுடன் ஆடிப்பிறப்பு நிகழ்வு கொண்டாடப்படுகிறது.  கடந்த ஆண்டு உரும்பிராய் பாரதிதாசன் சனசமூகநிலையத்திலும் இந்நிகழ்வு நடைபெற்றது. 

ஓப்பிட்டளவில் பார்த்தால் என்ன தான் நாகரீகமோகம் ஏற்பட்டாலும் தமது பாரம்பரிய நிகழ்வுகள், கொண்டாட்டங்களைப் பொறுத்தவரை சிங்களவர்கள் அக்கறையுடன் செயற்படுகிறார்கள் என்பதை நாம் ஒப்புக் கொண்டு தானாக வேண்டும். எமது தரப்பிலோ மற்றவர்களை விட தமது தேசியப்பற்றின் நீளம் அரை அங்குலம் கூடத் தான் உள்ளது என்று நிருபிப்பதிலேயே எமது காலம் போய் விடும்.
  
'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை' என்ற சிறுவர் பாடலை எழுதிய நவாலியூர்சோமசுந்தரப்புலவரின் மகன் சோ.நடராசா அவர்கள் குறித்து ' வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' எனும் நூலில் உலகத்தமிழ் அறிவிப்பாளர் B.H அப்துல்ஹானித் அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ளுவோம்.                      

"1935 -ம் ஆண்டின் பின்னர் தான் மும்மொழிகளுக்கும் தனித்தனி நிரந்தர அறிவிப்பாளர்களை நியமிக்கும் எண்ணம் நிர்வாகத்துக்கு வந்தது. அந்த முதலாவது நிரந்தர அறிவிப்பாளராகவும், தமிழ் ஒலிப்பரப்பின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டவர், நவாலியூர் சோ.நடராசர் அவர்கள் (சோமசுந்தரப்புலவரின் புதல்வர்)".
(பக்கம் 244)
 

(அவரது கவனம் கெளதம புத்தர் அருளிய 'தம்ம பதம்'  என்ற நூலின் பால் ஈர்க்கப்பட்டது. தம்ம பதம் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டதோடு, பெளத்தமதக் கோட்பாடுகளையும் கடைப்பிடித்து வாழத் தலைப்பட்டார் அதன் விளைவு 1983-ம் ஆண்டு தனது இந்துமத அடையாளத்தைத் துறந்து, பெளத்த மதத்தைத் தழுவியதோடு , ஒரு பெளத்ததுறவியாகவும் மாறி துறவறம் பூண்டார். அதன் அடையாளமாக தனது பெயரையும் 'யாப்பனே தம்ம ரத்ன தேர' என்று மாற்றிக்கொண்டார். சிறிதுகாலம் 'கம்பஹா'  எனுமிடத்தில் அமைந்திருந்த ' வித்யா ரவீந்திர மஹாபிரிவென எனும் பெளத்த மடாலயத்தில் இளம் பிக்குகளுக்கு தமிழ் கற்பிக்கும் தொண்டினையும் செய்துவந்தார்.

முன்பு ' வீரமங்கை ஜோன் ஒவ் ஆர்க் நாடக ஒத்திகையின் போது சந்தித்த சோ.நடராசா அவர்களை இவன் மீண்டும் சந்தித்தது வானொலி நிலையத்தில் தான். எந்த வானொலியில் முதல் நிரந்தரத்தமிழ் அறிவிப்பாளராக பணியாற்றினாரோ, அதே வானொலியில் பெளத்தமதக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு சிறு உரையாற்றுவதற்காகவே ஒரு பெளத்த துறவியாக வருகை தந்திருந்தார். தினமும் காலை வேளைகளில் தமிழ்த்தேசிய சேவையில் சைவநற்சிந்தனை, கிறிஸ்தவநற்சிந்தனை, இஸ்லாமிய நற்சிந்தனை மற்றும் பெளத்த நற்சிந்தனை என ஓவ்வொரு மதத்திற்கும் ஜந்து ஜந்து நிமிடங்களாக பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் பெளத்த நற்சிந்தனையை வழங்குவதற்காகவே அவர் வருகை தந்திருந்தார். அது தமிழ் வர்த்தக சேவையும், தேசிய சேவையும்  ஓரே நிர்வாகத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டிருந்த காலம் .... முதலாம் இலக்கக்கலையகத்தில் அமர்ந்து இருந்த சோ.நடராசா அவர்களைக் கண்டதும் (வழக்கமாக அவரை ஜயா! என்று தான் விழிப்பான் ஆனால் இப்போது துறவிக்கோலத்தில் இருக்கும் அவரை சுவாமி என்று அழைக்க வேண்டுமோ எனப் புரியாமல்) வெறும் வணக்கம் மட்டுமே சொன்னான் அவரோ ஏற்கனவே இவனைக் கண்டு பழகியவர் என்பதால் மிகவும் சாதரணமாக, தோழமையுடன் (வணக்கம் தம்பி,வாங்கோ... நல்லா இருக்கிறீங்களோ..?) என்று நலன் விசாரித்து விட்டு அருகில் இவனை அழைத்து மிகவும் இரகசியமாக இவன் காதில் சொன்னார்... (தம்பி! அறிவிப்புச் செய்யேக்க என்ர பழைய பேரைச் சொல்லிப்போடாதேங்கோ இப்ப என்ர பெயர் ' யாப்பனே தம்ம ரத்னதேர' ..) என்றார் இவரும் அவ்வாறே, ( நற்சிந்தனை வழங்குபவர் சங்கைக்குரிய யாப்பனே தம்ம ரத்ணாதேரர் அவர்கள்)  என அறிவிப்புச் செய்தான். 


(யாப்பனே தம்ம ரத்ணாதேரர் என அழைக்கப்பட்ட நவாலியூர் சோ.நடராசா அவர்கள் எழுபத்தெட்டாவது வயதில் 1988 ஆம் ஆண்டு 28 ம் திகதி தன்பூவுடல் நீத்து புகழ் உடல் எய்தினார்.) பக்கம் 252-253

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீர துங்க ஊடகத்துறை அமைச்சர் பந்துலகுணவர்த்தனாவைத் தொடர்பு கொண்டு பெளத்த சிந்தனைகளை இலங்கை வானொலியில் தமிழில் யார் ஒலிபரப்பினார்கள் போன்ற விடயங்களைத் தெரிந்து கொள்வது நல்லது மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற தமிழ் காவியங்கள் எந்த மதத்தின் பெருமைகளை பறைசாற்றின என்பதையும் அறிந்தால் குருந்தூர் மலையில் ஆடிய, ஆட்டுவித்த கூத்துக்களைக் (பெளத்த எச்சங்கள் காணும் இடமெல்லாம் சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம்)  கைவிடக் கூடும் என நம்புவோமாக.


புதியது பழையவை