பாடசாலை சிறுமியை வன்புணர்வு செய்யும் நோக்கில் காட்டிற்குள் இழுத்துச் சென்ற சிறிலங்கா இராணுவ கோப்ரல் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை ஆனமடுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அம்பாறை 24வது காலாட்படை தலைமையகத்தில் பணியாற்றும் 38 வயதுடைய இராணுவ கோப்ரல் ஒருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பாடசாலைக்கு சென்றுவிட்டு திரும்பிய சிறுமி, வீட்டுக்கு அருகில் உள்ள வயலில் மாலையில் பறவைகளை துரத்திக் கொண்டிருந்துள்ளார். இதன்போது சிறுமியை குறித்த இராணுவ அதிகாரி காட்டிற்குள் இழுத்துச் சென்றுள்ளார்.
தனது சகோதரியை யாரோ இழுத்துச் செல்வதைக் கண்ட இளைய சகோதரர் தனது தாயிடம் சத்தமிட்டு கூறியுள்ளார். இதனையடுத்து தாய், அலறி அழத் தொடங்கியதை கேட்ட இராணுவக் கோப்ரல் சிறுமியைக் கைவிட்டு வேறு திசையில் ஓடியுள்ளார்.
சிறுமியை காட்டுக்குள் கோப்ரல் இழுத்துச் சென்றதால் சிறுமிக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும், சம்பவம் தொடர்பில் உடனடியாக ஆனமடுவ காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டநிலையில், சந்தேகநபரின் அடையாளத்தை சிறுமி தெரிவித்ததுடன், காவல்துறை குழுவொன்று விரைவாக செயற்பட்டு சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளது.