ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொடுத்த வாக்குறுதி!



பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் மீளாய்வு செய்யப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடிய அதிபர், ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக் குழு ஆராய உள்ளது.

திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படுமென உறுதியளித்துள்ளார்.

அத்தோடு, ஊழல் ஒழிப்புச் சட்டம், எதிர்வரும் ஜுலை 19ஆம் திகதி நாடாளுமன்றக் குழுநிலையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்றும், உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னாரில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல், வன்னியில் தெங்கு பயிற்செய்கையை ஊக்குவித்தல் மற்றும் "யாழ்ப்பாணத்தை" பல்கலைக்கழக நகரமாக ஸ்தாபித்தல் ஆகிய குறிக்கோள்கள் தொடர்பாக வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அதிபர் கலந்துரையாடியுள்ளார்.

காங்கேசந்துறை துறைமுகம், வவுனியா மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் வட மாகாணத்தையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் படகு சேவையை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு என்பன தொடர்பாக இன்றைய கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

பட்டியல் 1இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள படி 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் காவல்துறை அதிகாரம் தவிர்ந்து முழுமையான அதிகாரம் கொண்டது என்று தெரிவித்த அதிபர், அதிகாரப் பகிர்வுத் திட்டங்களை எடுத்துரைத்ததுடன் அதனை நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையிலான உடன்பாட்டிற்கு உட்பட்டு பட்டியல் 3இல் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு உட்பட்டதாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார்.
புதியது பழையவை