நசீர் அஹமட்டிடம் 25 கோடி நஷ்ட ஈடு கோரி நோட்டிஸ் அனுப்பிய - கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் அமைச்சுப் பதவிப் பெற்று மொட்டுக் கட்சிக்குத் தாவிய சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபா (250 மில்லியன்) நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடந்த மாதம் 11ம் திகதி இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் பொய்யான கருத்துக்களையும் அரச தொழில் இடமாற்றங்கள் குறித்து பிழையான தகவல்களையும் வெளியிட்டு அவற்​றை கிழக்கு மாகாண ஆளுநருடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக நோட்டிஸில் கோரியுள்ளார்.

அத்துடன் இந்த நோட்டிஸ் கிடைக்கப் பெற்று 14 நாட்களுக்குள் 25 கோடி ரூபா நஷ்டஈட்டுத் தொகையை கிழக்கு மாகாண பாடசாலை வளர்ச்சிக்கு வழங்குமாறும் இல்லையேல் நசீர் அஹமட் மீது மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் எச்சரித்துள்ளார்.

நசீர் அஹமட் வழங்கும் நட்டஈட்டுத் தொகை கிழக்கு மாகாணத்தில் உள்ள 10 முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அந்த பாடசாலைகளின் பெயர் பட்டியலையும் இணைத்துள்ளார்.

காத்தான்குடி வலயக் கல்வி பணிப்பாளராக தற்காலிக நியமனம் பெற்றிருந்த அதிபர் சேவை தரத்தில் இருந்த ஒருவர் அப்பதவிக்கு தகுதியான கல்வி நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்ட பின் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த விடயத்தை அரசியல் ரீதியில் தூக்கிப்பிடித்த அமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுநர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகப்படுத்தி இந்த இடமாற்றத்தை செய்ததாக  கடும் விமர்சனங்களை முன்வைத்தார் என ஆளுநர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதியது பழையவை