சற்றுமுன் நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3உலக அளவில் கவனத்தை ஈர்த்த சந்திராயன் 3 விண்கலம் சற்றுமுன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வெற்றிப்பயணத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், தரையிறக்க காட்சியை இணையவழியில் நேரலையாக பார்த்துள்ளார்.

நிலவில் தரையிறங்கும் கலத்தின் தரையிறக்க காட்சியை இன்று மாலை 5.20 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.நிலவில் தரையிறங்கும் கலமான விக்ரமின் செயற்பாடுகள் தற்போதுவரை சீராக இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

"நிலவில் விக்ரம் லாண்டரை தரையிறங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். தரையிறங்கிக் கலன் திட்டமிட்டப்படி, குறிப்பிட்ட அந்த இடத்திற்கு மாலை 5.44 மணிக்கு சென்றடையும்.

தானியங்கி தரையிறங்கி செயற்பாட்டு கட்டமைப்பிடம் இருந்து கட்டளையைப் பெற்றவுடன் தரையிறங்கி கலன், கீழே இறங்குவதற்காக அதிலுள்ள இயந்திரங்களை இயங்கச் செய்யும்.

நிலவில் விக்ரம் லாண்டரை தரையிறக்குவதற்கான குழு, கட்டளைகள் சரியான வரிசையில் பெறப்படுகிறதா என்பதை உறுதி செய்யும்." என இஸ்ரோ தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.வழக்கமான சோதனைகளை சீரான இடைவெளியில் விஞ்ஞானிகள் மேற்கொண்டுவரும் நிலையில், நிலவு நோக்கிய 'தரையிறங்கும் கலத்தின்' நகர்வு சுமுகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கட்டத்தில் 'தரையிறங்கும் கலத்தின்' செயல்பாடு இயல்புநிலையில் இருந்து வேறுபட்டால், தரையிறங்கும் திட்டத்தை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

இன்று புதன்கிழமை நிலவுக்கு மேலே 30 கிலோமீற்றர் உயரத்தில் 'தரையிறங்கும் கலம்' இருக்கும்போது, அதை நிலவில் தரையிறக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நிலவின் தரையை நோக்கி வினாடிக்கு 1.68 கிலோமீற்றர் வேகத்தில் 'தரையிறங்கும் கலம்' செல்லும் என்பதுடன், இதன்போது நிலவின் ஈர்ப்புவிசையும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், 'அதன்' வேகத்தை கண்காணித்து கட்டுப்படுத்துவதில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்த இருக்கின்றனர்.


இதில் ஏதும் தவறு ஏற்படும் பட்சத்தில், நிலவின் தரையில் 'தரையிறங்கும் கலம்' மோதி சேதமடைய வாய்ப்புள்ளதால், நிலவை நெருங்கும் 'தரையிறங்கும் கலத்தின் இறுதிக் கட்ட நிகழ்வுகள் நொடிக்கு நொடி கண்காணிக்கப்படுகின்றன.

நிலவின் தரையில் பாதுகாப்பாக விக்ரம் தரையிறங்கும் கலம்' தரையிறங்கும் அந்த தருணத்தை இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்த முயற்சி வெற்றியடையுமாயின், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறங்கிய முதலாவது நாடாக இந்தியா வரலாற்று படைக்கும்.

விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறக்கத்தை மேற்கொண்ட 4 ஆவது நாடாக இந்தியா பதிவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை