இலங்கை தேசிய கீதம் தவறாக உச்சரித்து பாடப்பட்டமை தொடர்பில் விசாரணை



லங்கா பிரீமியர் லீக்(2023 ) போட்டியின் ஆரம்ப விழாவில் தேசிய கீதம் தவறாக உச்சரித்து பாடப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக அறிவித்துள்ளார்.


தேசிய கீதத்தின் வரிகளை திரிவுபடுத்துவது இலங்கை அரசியலமைப்பை மீறுவதாகக் கருதப்படுவதாக அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கவனத்தை ஈர்க்கும் நிகழ்வொன்றின் போது தேசிய கீதத்தின் வரிகள் திரிவுபடுத்தப்பட்டமை வருந்தத்தக்கது என ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.


நடைபெற்ற எல்பிஎல் ஆரம்ப விழாவில் தேசிய கீதத்தை பாடிய இலங்கையின் பிரபல பாடகர் உமாரா சிங்கவன்ச, தேசிய கீதத்தின் சில முக்கிய வார்த்தைகளை தவறாக உச்சரித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.


இதனால், அந்தப் பாடகர் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, எந்தவொரு நாட்டின் தேசிய கீதமும் நாட்டின் அடையாளத்தையும் கலாசாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அதை யாரும் சிதைக்க முடியாது. 

எனவே, தேசிய கீதம் திரிக்கப்பட்ட இவ்வாறான சம்பவங்களை மன்னிக்க முடியாது' என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை