வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!வெங்காயத்துக்கு 40 சதவீத ஏற்றுமதி வரியை விதிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் விலை 50 தொடக்கம் 70 ரூபாய் வரை அதிகரித்து 200 முதல் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜூலை மாதம் முதல் இந்தியாவில் வெங்காய விலை அதிகரித்துள்ளதன் காரணமாக டிசம்பர் 31ஆம் திகதி வரை மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை இந்திய அரசாங்கம் எடுத்துள்ளது. 

வெங்காய இறக்குமதி
இதன் காரணமாக இந்தியாவில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நாடுகள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கையில் பெரிய வெங்காயச் செய்கை தொடர்பாக உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயத் திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வெங்காயச் செய்கை நீண்ட காலமாக வெற்றியடைந்து வந்தாலும் கடந்த சில வருடங்களாக அது தோல்வியடைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெங்காயத்தின் வருடாந்தத் தேவை 3 இலட்சம் மெற்றிக் தொன்களாக இருந்த போதும் வருடாந்த வெங்காய இறக்குமதியானது 1 இலட்சத்து 31 ஆயிரத்து 795 மெற்றிக் தொன்களாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை