மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக இன்று(16-08-2023) நடைபெற்றது.


இராம பிரானால் தனது தந்தைக்கு பிதிர்க்கடன் செலுத்தியதாகக் கருதப்படும் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தனிச்சிறப்புமிக்கதாகக் கருதப்படுகின்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த 07ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று(16) காலை விசேட பூஜைகள் தம்ப பூஜை,மூலமூர்த்திக்கான பூஜைகள் நடைபெற்றதுடன் திருப் பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் சுவாமி ஊர்வலமாக தீர்த்தக்கரைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ ஆரோகரா கோசத்துடன் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.இதன்போது தமது இறந்த உறவுகளின் ஆத்மசாந்திக்கான பிதிர்க்கடன் நிறைவேற்றும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் கொடியிறக்க உற்சவத்துடன் வருடாந்த உற்சவம் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை