மண் மாபியாக்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும் இடையில் மோதல்!மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பிரதேசத்தில் உள்ள சோதையன் கட்டு பகுதியில் கிரவல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்ததையடுத்து அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இன்று அப்பகுதிக்கு சென்றிருந்தனர்.

கிரவல் அகழ்வு இடம்பெறுவதை அவதானித்த இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் குறித்த பகுதியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உக்காத கழிவு உள்ளதாகவும் அது உடைப்பெடுத்தால் ஆற்றில் கலக்கும் அபாயம் உள்ளதாகவும் மற்றும் சோதையன் கட்டு எனப்படுவது தமிழர் பாரம்பரிய கட்டாகும் அதை தகர்த்து கிரவல் அகழ வேண்டாம் எனவும் தெரிவித்து குறித்த வேலையினை உடன் நிறுத்துமாறு கோரினர்.

தாம் குறித்த பகுதியில் வனஇலாகா திணைக்களம் , புவிச்சரிதவியல் திணைக்கள ஆகியவற்றின் அனுமதி பெற்றுத்தான்  இந்த ஒப்பந்த வேலையினை பெற்றதாகவும் அதிக பணம் செலவழித்துள்ளதாகவும் தெரிவித்து வேலையினை இடை நிறுத்த முடியாது என கரிவல் அகழும் தரப்பினர் தெரிவித்தனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.


இதன்போது தொலைபேசியில் காணொளி பதிவு செய்தார் என அவ்விடத்தில் இரு தரப்பிற்கிடையில் முறுகல் நிலை உருவானது. இதன் போது அங்கு வந்த கரடியனாறு காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

குறித்த இடத்தில் வைத்தியசாலை கழிவு உள்ளதால் குறித்த வேலையை தற்காலிகமாக நிறுத்துமாறும் காவல்துறையினர் ஒப்பந்தக்காரர்களுக்கு தெரிவித்து அங்கிருந்த கனரக வாகனத்தையும் அகற்றுமாறும் கோரினர்.

பிரதேச செயலாளரின் அனுமதி இல்லாமல் இடம்பெறும் இவ்வேலை தொடர்பிலும் இதற்கு முன் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்படும் திணைக்களங்கள் தொடர்பில் கலந்துரையாடி இது தொடர்பான முன்னேற்ற நகர்வை மேற்கொள்வதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.


இந்த நிலையில், கிரவல்அகழ்வு வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
புதியது பழையவை