நல்லூர் கந்தனுக்கு நாளை கொடியேற்றம் - கொடிச்சீலை கையளிப்பு!



வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கான கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று (20-08-2023)காலை நடைபெற்றது.

நல்லூர் கந்தசுவாமி வருடாந்த பெருந்திருவிழா நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாவுள்ளது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை இன்று காலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.

யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல்மடம் முருகன் ஆலயத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, அங்கிருந்து தேர் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து வரப்பட்ட கொடிச்சீலை, காலை 10.00 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

அங்கு ஆலயத்தின் வெளிவீதி வலம்வந்து, சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25நாட்கள் இடம்பெறவுள்ளது.

உற்சவத்தை முன்னிட்டு, நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி வரை நீடிக்குமென, யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது.

புதியது பழையவை