மட்டக்களப்பு காத்தான்குடியில் பட்டப் பகலில் வீட்டை உடைத்து 28 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத் தாலியை திருடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 26 வயது நபரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ். ஏ. ரஹீம் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி ஊர்வீதியில் உள்ள ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் ஒருவரின் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து இத் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்
திருடிய நபரை காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று திங்கட்கிழமை (25 -09-2023) இரவு கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி காலை தனது வீட்டை பூட்டிவிட்டு மட்டக்களப்பில் உள்ள தனது மகளின் வீட்டுக்குச் சென்று மீண்டும் அன்றைய தினம் பகல் 2 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன் கதவை உடைத்து திருடி இருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.