ஐ.நா பொது சபைக்கூட்டம் இன்று ஆரம்பம்!



ஐக்கிய நாடுகள் சபையின் 78வது பொது சபைக்கூட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. 

இன்று (18-09-2023)முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க எதிர்வரும் 21ம் திகதி தமது விசேட உரையை ஆற்றவுள்ளார்.

2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக செப்டம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள, 2030 ஆம் ஆண்டிற்கான மாற்றம் மற்றும் விரைவான நடவடிக்கைகள் என்பவற்றுக்காக உலக தலைவர்களினால் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் 2023 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் உச்சி மாநாட்டின் அரச தலைவர்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

அத்துடன், உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை ஜனாதிபதி, நடத்தவுள்ளதுடன், கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலிலும் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை