சிங்கப்பூரின் புதிய அதிபராக இலங்கை தமிழன்சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் யாழ்ப்பாண தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார்.

சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் வென்றதன் மூலம் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.

அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று சிங்கப்பூரின் 9ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தன்னுடன் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களையும் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மாதம் 22ஆம் திகதி நடைபெற்றது.

யாழ்ப்பாண தமிழரான தர்மன் சண்முகரத்னம் (66) மற்றும் இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அவர்கள் 3 பேரும் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டது.

தேர்தல் பிரசாரம் வரும் நேற்றுமுன்தினம் (ஓகஸ்ட் 30ஆம் திகதி) நிறைவு பெற்ற நிலையில், இன்று (செப்டம்பர் 1ஆம் திகதி) வாக்குப்பதிவு நடைபெற்றது.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் முதல்முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 10 நகரங்களில் சிங்கப்பூர் மக்கள் வாக்களித்தனர்.

சுமார் 27 லட்சம் மக்கள் வரை வாக்களித்த நிலையில் இன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் கடந்த 2001ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணைப் பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
புதியது பழையவை