சிறிலங்காவால் முன்மொழியப்பட்ட “உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை” பரிசீலிப்பதற்கு முன்னர் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் நீதியைப் பெற வழிகோல வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் 54 ஆவது ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றிய மனித உரிமைச்செயற்பாட்டாளர் மணிவண்ணன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தை திசை திருப்ப திட்டம்
தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகான நீதி ஆகியவற்றில் இருந்து சர்வதேச சமூகத்தை திசை திருப்புவதையும் நோக்கமாகக் கொண்டே சிறிலங்காவின் “உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு” அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக சிறிலங்கா பத்துக்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களை நிறுவியும் எந்த முடிவும் இல்லை. ஆணைக்குழுக்களை நிறுவுதல் என்பது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான சிறிலங்காவின் கருவியாகும்.
இம்முறை, தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் ஒப்பிட்டு தன்னை நியாயப்படுத்த சிறிலங்கா திட்டமிட்டுள்ளது. ஆனால் இரண்டுக்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல்
அதாவது தென்னாப்பிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் என்பது பாதிக்கப்பட்டவர்களால் முன்மொழியப்பட்டதும் நிர்வகிக்கப்பட்டதுமாகும். ஆனால் இலங்கையில் பாரிய அட்டூழியங்களை நிகழ்த்திய வெற்றியாளர்களே இதன் முயற்சியை முன்வைக்கின்றனர்.
இதேபோன்ற வழிகளில் தொடங்கப்பட்ட முன்னைய 'உண்மைக்கான ஆணையங்கள்' தோல்வியடைந்துள்ளன. ஏனெனில் நியமிக்கப்பட்ட ஆணையங்கள் பாதிக்கப்பட்டவர்கள் நம்பவில்லை.
ஆணையங்களிடம் வாக்குமூலம் வழங்க முன் வந்த பல பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு தரப்பினராலும் மிக மோசமாகஅச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், சிறிலங்காவால் முன்மொழியப்பட்ட “உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை” பரிசீலிப்பதற்கு முன்னர் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் நீதியைப் பெற வழிகோல வேண்டும்” என்றார்.