மட்டக்களப்பு போராட்டத்திற்கு அஞ்சி பாதையை மாற்றிய - ஜனாதிபதி ரணில்



மட்டக்களப்பு நிகழ்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம்(08-10-2023) கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு அஞ்சி பிரதான வீதியுடாக செல்லாமல் ஊர் வீதிகளுக்குள்ளால் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றும் இன்றும் அங்குள்ள இரண்டு பாடசாலை நிகழ்வுகளில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு பாசிக்குடாவில் தங்கியிருந்து இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்றுவருகின்றார்.

இந்த நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலையொன்றுக்கு வருகைதரவிருந்த நிலையில் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23நாட்களாக போராடிவரும் நிலையில் இன்று அந்த வீதியால் செல்ல அச்சப்பட்டதோடு பெருமளவான பொலிஸார் போராட்டம் நடைபெறும் இடங்களில் குவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பெருமளவான பொலிஸ் அதிகாரிகளும் வருகை தந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது அடிக்கடி ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரும் வருகைதந்து போராட்டம் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டுச்சென்றதுடன் பொலிஸ் அதிகாரிகளுடனும் கலந்துரையாடிச்சென்றதை காணமுடிந்தது.


இந்த நிலையில் திடீரென போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற பொலிஸார் கூடாரத்தின் முன்பாக வரிசையில் நின்று பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்தனர்.

இதன் போது திடீரென பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரை அங்கிருந்துசெல்லுமாறு உயரதிகாரிகளினால் பணிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி உள்வீதியினால் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது.


ஒரு நாட்டின் மக்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கும் நிலையில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் ஓடி ஒளிந்து செல்லும் ஜனாதிபதியினால் நாட்டின் பிரச்சினையை எவ்வாறு தீர்க்கமுடியும் என கேள்வியெழுப்பியுள்ளனர்.
புதியது பழையவை