பாலுக்கும், தயிருக்கும் பெயர்போன சித்தாண்டியில் அந்தப் பாலையும், தயிரையும் தரும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையை பாதுகாக்க ஒன்றிணைய மாட்டோமா?



எமது கிராமம் பாலுக்கும், தயிருக்கும் பெயர்போன கிராமம் மட்டுமல்ல ஒரு விவசாயக் கிராமமுமாகும்.  

எமது கால்நடைகளை காலம் காலமாக நாம் மேய்த்து வந்த எமது மாவட்டத்தின் எல்லைக்குள்ளே அமைந்த மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில் எம்மை அங்கிருந்து துரத்தியடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இனவாத எண்ணம்கொண்ட சிலமக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் திட்டம்போட்டு செயற்பட்டு வருகின்றார்கள்.

எமது மாடுகளைக் கொன்றும், எமது கால்நடையாளர்களை அடித்தும் துன்புறுத்தியும் அச்சமூட்டியும் வருகிறார்கள். இத்தனைக்கும் அந்த இடம் எமது சொந்த இடம். எமது மட்டக்களப்பில் உள்ள பிரதேசம். 

இந்த மேய்ச்சல் தரைக்காக எங்கள் மாடுகளை பலிகொடுத்திருக்கிறோம், எங்கள் உடலை வருத்தியிருக்கிறோம், அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கிறோம். ஏன் சில இனவாதிகளால் அடியும் வாங்கியிருக்கிறோம்.

இது மட்டுமா இன்னொரு பக்கம் யானைகளின் தொல்லையால் தூக்கமிழந்திருக்கிறோம். சில உயிர்களைக்கூடக் கொடுத்திருக்கிறோம்.  

இவற்றையெல்லாம் இந்த தியாகம் எல்லாம் செய்தது. எங்கள் சுயநலத்திற்காக இல்லை ஐயா. எல்லாம் எமது எல்லையில் எமக்கான வாழ்வாதாரத்திற்கான இடத்தைக் காப்பதற்காககத்தான். 

எங்களுடைய தொழிலையும், நிலத்தையும் எதிர்வரும் சந்ததிக்கும் கடத்தவேண்டும் என்றுதான் இத்தனை துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்கிறோம். இன்னும் மழையிலும், வெயிலிலும் இந்த அறவழிப் போராட்டத்தில் வீதியிலே படுத்துறங்கிறோம்.

ஒரு சிலர் கேட்கிறீர்கள், பால் விலையைக் கூறி எங்கள் போராட்டத்திற்கு உதவமாட்டீர்கள் என்று. ஏனய்யா உங்களுடைய இதயம் திறந்து யோசித்துப் பாருங்கள். எம்மை விரட்ட நினைக்கும் நரிகளின் செயல்களை விட உங்கள் வார்த்தைகள் எம்மைத் தாக்காதா? என்று ஒரு நிமிடம் நீங்கள் யோசிக்கவில்லையா? எம்மை விரட்ட நினைக்கும் நரிகளை விட நீங்கள் எங்கள் உறவுகள் ஐயா. 

உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்காகவும்தான் இந்த இடத்தில் நிற்கிறோம். 

எங்கள் கண்ணீர், துயரம் எல்லாவற்றையும் நீங்கள் இன்னும் உயரவில்லையா? இதனைவிடவும் இந்த அறவழிப் போராட்டத்தால் எங்கள் உயிர்போனால்தான் நீங்கள் எங்கள் போராட்ட களத்தை திரும்பிப் பார்ப்பீர்களா?

உண்மையிலே உணர்விருந்தால், நீங்களும் என் உறவினன் என நினைத்தால் , இந்தப் பதிவை உங்கள் முகநுலில் பதிவிடுங்கள், வாட்சப்பில் பகிருங்கள். எங்களுக்கு ஆதரவைத் தாருங்கள்.

எமது அவலத்தை ஊடகங்கள் வாயிலாகக் கொண்டு சேர்க்கும் ஊடகவியலாளர்கள் நித்தியானந்தன், சசிதரன் முதலிய ஊடக அண்ணாமாருக்கு கோடான கோடி நன்றிகள்.

நுளம்பின் கடியிலும், யானையின் பயத்திலும், இனவாதிகளின் அச்சுறுத்தலிலும்  கால்நடைத் தொழிலையும்அதற்குரிய நிலத்தையும் காத்து நிற்கும் ஒருவன் .
புதியது பழையவை