மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலமளித்தார் ஜனாதிபதி - கோவிந்தன் கருணாகரம் எம்.பிஇஸ்ரேலை ஆதரிக்கும் மேற்குலகம் இலங்கையைக் கண்டிப்பதற்கு அருகதையற்றது என்றும் இஸ்ரேல் செய்துவரும் இன அழிப்பையே அன்று தாங்களும் வடகிழக்கில் செய்தோம் என்றும் மறைமுகமாக ஜனாதிபதி ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவரது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

எமது ஜனாதிபதி அவர்கள் ஒரிரு நாட்களின் முன் மேற்குலக நாடுகளுக்கு அறைகூவல் ஒன்று விடுத்தார். ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை போன்றவற்றுக்கு மேற்குலக நாடுகள் வரும் போது பரிசுத்தமான கரங்களுடன் வரவேண்டுமென்றுரைத்தார்.


எமது ஜனாதிபதி அவர்களது புலமை, திறமை தொடர்பாக எனக்கு மதிப்புண்டு. ஆனால், இந்தக் கருத்தினை வெளியிடும் போது அவர் மறைமுகமாக எமது நாட்டில் நடைபெற்ற இனப் படுகொலையினையும், இனச் சுத்திகரிப்பினையும் ஏற்றுக் கொள்கின்றார் என்று கருதக் கூடியதாக இருக்கின்றது.


ஹாசா யுத்தத்தில் இஸ்ரேல் நடத்தும் மனாதாபிமானமற்ற மனித உரிமை மீறும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவினை நல்கும் மேற்குலகம் எமது நாட்டின் மீது மட்டும் மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை கேள்விக்குட்படுத்தும் காரணம் என்ன? எனக் கோரியதன் மூலம் இன்று ஹாசாவில் இஸ்ரேல் செய்துவரும் இன அழிப்பையே அன்று நாங்களும் வடக்கு கிழக்கில் செய்தோம்.

இன்று இஸ்ரேலை ஆதரிக்கும் நீங்கள் அன்று நாம் செய்த செயலை கண்டிப்பதற்கு உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என குறிப்பிடுவதன் மூலம் இஸ்ரேலும் நாமும் ஒன்றையே செய்தோம் என மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்.
புதியது பழையவை