மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு கைது - ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் கடும் கண்டனம்மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த மற்றும் அதில் பங்கேற்றவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த மற்றும் அதில் பங்கேற்றவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.


இலங்கையிலுள்ள அரசியல்வாதிகளும் குடிசார் செயற்பாட்டாளர்களும் குறித்த கைது நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த பின்னணியில், தற்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டம்
தமிழர் தாயகப்பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை மாவீரர் நாள் நினைவு கூரப்பட்டதை தொடர்ந்து, அதில் பங்கேற்றோர், அதனை ஏற்பாடு செய்தோர் உள்ளிட்ட 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், இந்த சட்டத்தின் கீழ் மேலும் 20 பேர் கைது செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.


இந்த நடவடிக்கைகள், மனித உரிமைகளை மீறும் சட்டத்தின் பாவனையை நிறுத்தி வைப்பது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு மாறானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா வேண்டுகோள்
இந்த நிலையில், இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாவனையை கைவிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்த வகையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைது நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச தரநிலை மற்றும் மனித உரிமை விதிகளுக்கு அமைய குறித்த சட்டம் மாற்றப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை