யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் நாளை (10-01-2024) காலை 9.30 மணிக்கு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்வித பேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒன்பது தமிழர்கள் படுகொலை
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.
இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அது மட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.