கிழக்கு மாகாணத்திற்கான அஞ்சல் நிர்வாக கட்டிட தொகுதியானது மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிட தொகுதியானது இன்று(06-01-2024) போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தபாலக கட்டிட தொகுதி
நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறீநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் தபால் சேவை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு இந்த மாகாண தபாலக கட்டிட தொகுதி அமைக்கப்பட்டள்ளது.
அன்றைய தபால்துறை அமைச்சரினால் இந்த கட்டிட தொகுதி வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
மாகாண பிரதி அஞ்சல் மாஅதிபர் முகமத் அஸ்லம் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் ஊடகத்துறை ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் சிவனேசன், இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட, மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ முரளிதரன் மற்றும் மத குருமார்கள் அரசாங்கத் திணைகள் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் பிரசன்னமாகி இருந்தனர்.
இந்தப் புதிய அஞ்சல் கட்டிட தொகுதியில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் அதிபரின் அலுவலகம், வாகன நிர்வாக கணக்கீட்டு பகுதி, மாகாண அஞ்சல் பயிற்சி நிலையம், மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகம் என்பனவும் அமையப்பெற்றுள்ளன.
அத்துடன் இக்கட்டிடத்தொகுதிக்காக 480மில்லியன் ரூபா தபால் திணைக்களத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.