தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று (06-01-2024) ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெறவுள்ளது.
ஜல்லிக்கட்டுடன் தொடங்கும் இந்த பொங்கல் நிகழ்வானது இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வில் 200 காளை மாடுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளதால் இதனை பார்வையிடுவதற்காக பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருகோணமலைக்கு வருகைத் தந்துள்ளனர்.
மேலும், இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் ஶ்ரீ முருகனும் சிறப்பு விருந்தினராக தென்னிந்திய நடிகர் நந்தாவும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.