தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே இலங்கையில் கொண்டு வரப்பட்ட, கொண்டுவரப்படுகின்ற சட்டங்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டம் மூலம் பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள்தான்.
இலங்கையில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் 30, 40 ஆண்டுகளாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டது.
இந்த Online Safety Bill சட்ட மூலம் ஊடாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் ஒரு பிரச்சனைக்கு எதிராக ஒரு பாரிய கடையடைப்பு போராட்டம் அல்லது ஹர்த்தால் அறிவித்தால் அந்த அறிவித்தலை வழங்குபவர்களை இந்த Online Safety Bill ஊடாக கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
அதே போல 15 வருடங்களாக காணாமல் போன எமது உறவுகளுக்காக தாய்மார்களும், உறவினர்களும் வீதி வீதியாக போராடி 2000 க்கும் மேற்பட்ட நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை Online Safety Bill சட்ட மூலத்தினூடாக கைது செய்யக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
அரசாங்கத்தால் வடக்கு, கிழக்கில் காணப்படும் மக்களின் விகிதாசாரத்தை மாற்றுவதற்காகவும் பெரும்பான்மை சமூகத்தினரை மேலும் அதிகரிக்க சட்ட விரோத குடியேற்ற வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறான விடயங்களைச் சுட்டிக்காட்டினால் கூட அவை சட்டவிரோதமான செயற்பாடுகள் என குறித்த சட்டமூலம் மேற்கோள் காட்டும்” என இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.