தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரானார் - சிவஞானம் சிறீதரன்




இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய(21-01-2024) தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் இன்று தமிழர் தலைநகர் திருகோணமலையில் இடம்பெற்றது.


இந்தநிலையில், 184 வாக்குகளைப் பெற்று சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.


கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதற்தடவையாக தலைவர் தேர்வு மூவருக்கிடையிலான போட்டியாக அமைவதால் இன்றைய கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக தமிழ் அரசியற் தரப்பில் அனைவர் மத்தியிலும் பார்க்கப்பட்டது.

அந்த அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சக போட்டியாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு தனது ஆதரவை வழங்கினார். இதனைத் தொடர்ந்து தலைவர் தெரிவிற்கான வாக்களிப்பினை நடத்துவதற்கு பதில் செயலாளர் பா.சத்தியலிங்கத்தினால தெரிவிக்கப்பட்டதையடுத்து, இரகசிய வாக்களிப்பு இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சி வரலாற்றில் தலைவர் ஒருவர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை