மதுபானசாலைகளுக்கு பூட்டு



தமிழர் தைப்பொங்கல் தினத்தன்று, (எதிர்வரும் 15ஆம் திகதி) நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தைப்பொங்கல் தினமானது தமிழர்கள் நன்றிபகரும் நாளாகும். அன்றைய நாள் புனிதம் மிக்கதாகும். ஆகவே தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தைப்பொங்கல் தினத்தன்று மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் உத்தியோகபூர்வமாக விடுத்திருந்த கோரிக்கைக்கமையவே மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேற்படி தீர்மானத்தை உறுதிப்படுத்தியிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்துக்கு இராஜாங்க அமைச்சர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், தைப்பொங்கல் தினத்தில் மதுபானசாலைகளை மூடுவதனால் மது விற்பனையையோ அல்லது மது பாவனையையோ இல்லாது செய்துவிட முடியாது. எனினும், நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளில் தமிழர்களே அதிகமாக தொழில் புரிகின்றனர்.

அவர்களும் இந்த தைப்பொங்கல் தினத்தை குடும்பத்தோடு கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் தைத்திருநாளை புனிதமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் மதுபானசாலைகளை ஒரு தினத்துக்கு மூடுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தின் பிரதிகள் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை