தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு தரப்படவில்லையேல் விளைவுகள் மோசமாகும்“இந்த வருடமும் இலங்கை அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையலாம்." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாள் (15-01-2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர் வழங்கிய பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நியாயமான - நிரந்தர அரசியல் தீர்வு
“தமிழ்பேசும் மக்கள் தமது தாயகமான வடக்கு - கிழக்கில் சுதந்திரமாக வாழும் வகையில் நியாயமான - நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.


தமிழர்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்கக்கூடிய நிலைமை வடக்கு - கிழக்கில் ஏற்பட வேண்டும். எனவே, இந்த வருடத் தைப்பொங்கல் தமிழர்களுக்கு அதிமுக்கியமான பொங்கல். இந்த வருடமும் இலங்கை அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன், ஒரு நியாயமான - நிரந்தர அரசியல் தீர்வு எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் இந்த நன்னாளில் பிரார்த்தனை செய்கின்றேன் எனது தெரிவித்தார்.இது தவிரவும் இலங்கையில் நீண்ட காலமாகத் தேசிய இனப்பிரச்சினை தொடர்கின்றது. இன்னமும் அரசியல் தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


அதுமாத்திரமல்லாமல், இந்த நாட்டில் பெரும்பான்மை இனமாக வாழும் சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை இனமாக வாழும் தமிழ்பேசும் மக்களுக்கும் இடையில் அரசியல் சாசனம் ரீதியாக எந்தவொரு இணக்கப்பாடும் இதுவரை ஏற்படவில்லை.

இது சம்பந்தமாகக் கடந்த காலங்களில் பல பேச்சுவார்த்தைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்ற போதிலும், அந்தப் பேச்சுகளுக்குத் தமிழ்த் தரப்பினர் தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ள நிலையில், இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசுகள் தீர்வை வழங்க முன்வரவில்லை, இந்த நிலைமை இனியும் தொடர இடமளிக்க முடியாது என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை