வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சீனாவை வரவேற்கவில்லை - இரா.சாணக்கியன் எம்.பிவடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள், சீனா உள்நுழைவதை தடுத்து வைத்துள்ளதோடு இந்து சமுத்திரத்தில் வாழும் மக்களும் இலங்கையை நல்ல உதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வெளி விவகார அமைச்சகத்தின் (Ministry of External Affairs India) அழைப்பில் டெல்லியில் நடைபெற்ற றைஸ்னா 2024 டையலொக் (Raisina 2024 Dialogue) 9ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஏனைய நாடுகள் QUAD உடன் இணைந்து பணிகளை மேற்கொண்டாலும் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கு பாதகமான விடயங்களை மேற்கொள்கின்றனர்.

உதாரணமாக இலங்கையில் 2010இல் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் 2015 ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட போட் சிற்றி (Port City) போன்றவற்றை கூறலாம்.

ஆகவே புதிய நாடுகளை இணைத்துக் கொள்வதனை விட தற்போது செயற்படும் நாடுகளின் பலதரப்புக்களை அதாவது உதாரணமாக வடக்கு கிழக்கு தமிழ்த்தரப்பு. இலங்கையின் கடற்பரப்பில் 2/3 பங்கு வடக்கு கிழக்கிலேயே காணப்படுகின்றது. இது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களாக காணப்படுகின்றன.

இந்த பிரதேசங்களில் “சீனாவை வரவேற்பதில்லை” என்றே கூறியுள்ளோம். மூலோபாய இடங்களான (Strategic Locations) திருகோணமலை போன்ற இடங்களை இன்னும் பாதுகாப்பிற்கு உட்படுத்தாமைக்கான காரணம் அந்த பிரதேசங்களில் இருக்கும் எங்களைப் போன்ற அரசியல் பிரதிநிதிகளே.

QUAD நாடுகளும் எங்களைப் பலப்படுத்த வேண்டும். எங்களுடன் இணைந்து பணி மேற்கொள்வதை அதிகரிக்கும் போதே அது QUAD நாடுகளினுடைய வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

இலங்கையில் உள்ள மக்களுக்கு QUAD மேற்கொள்ளும் பணிகளைப் பற்றி விளக்கம் இல்லை. சீனாவினுடைய கடனில் சிக்கியுள்ளது இலங்கை. இலங்கை மக்களுக்கு சீனாவினுடைய முதலீடு எவ்வளவு பாதகமாக இருந்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.

இல்லையெனில் சீனா இலங்கைக்கு உதவி செய்கிறது என எம் மக்கள் நினைப்பார்கள். ஆகவே இலங்கையில் வெவ்வேறுபட்ட பணிகளை மேற்கொள்வதற்கு QUAD நாடுகள் முன்வர வேண்டும்.

மேலும், இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி வந்த வேளையில் QUAD நாடாக இருக்கக் கூடிய இந்தியாவே 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி உதவியது என்பதனையும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விழாவினுடைய பிரதம அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டதுடன், QUAD அமைப்பில் உள்ள அங்கத்துவ நாடுகளான அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் பங்குபற்றின.


புதியது பழையவை