யானைக்கு வைக்கப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (13-02-2024) காலை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல ஈச்சயடி பிரதேசத்தில் உள்ள பண்ணையொன்றிலே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த பண்ணை தேவநாயகம் செந்தூரன் என்பவரால் நடத்தப்பட்டு வந்ததாகவும், பண்ணையில் அனுமதியின்றி மின்கம்பிகள் பதித்ததால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொது மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தில் கிரான், புலி பாய்ந்த கல் பிரதேசத்தை சேர்ந்த ஆறுமுகம் யோகநாதன் என்னும் 51 வயது நபரும், விநாயகமூர்த்தி சுதர்சன் என்னும் 21 வயது இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேசமயம் குறித்த பண்ணையில் கடந்த வருடமும் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்று 54 வயதுடைய ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொது மக்கள் கவலை தெரிவித்தனர்.