இலங்கையில் எந்த ஒரு போர் சூழலும் இல்லாத சந்தர்ப்பத்தில் கிராமம் கிராமமாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் எனவும், இவற்றை வெளியுலகத்திற்கு கொண்டுவர முயற்சித்ததன் விளைவாக மட்டக்களப்பில் இருந்து வெளியேறுமாறு தனக்கு அழைப்பு வந்ததாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.
சுவிஸர்லாந்தில் இடம்பெற்ற கிழக்கின் சிவந்த சுவடுகள் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் அனைத்தும் வெளியுலகத்திற்கு சொல்லப்படாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய கிழக்கில் சிவந்த சுவடுகள் நூல் அறிமுக விழா சுவிஸ் சூரிச் நகரில் ஊடகவியலாளர் தா.வேதநாயகம் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன்போது நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த துரைரத்தினம்,
குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக சுவிட்சர்லாந்து சோசலிச ஜனநாயக கட்சி உறுப்பினரும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான கலாநிதி இராசமாணிக்கமும், நிகழ்வின் சிறப்பு அதிதியாக எழுத்தாளரும் தொழிலதிபருமான கலாநிதி நாகேஸ்வரன் அருள்ராச ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
போர்க்குற்ற ஆதாரங்கள்
“எமது இனத்தின் வலிகளை சுமந்து வந்திருக்கும் கிழக்கில் சிவந்த சுவடுகள் என்ற இந்நூல் ஆங்கிலம் ஜேர்மன் ஆகிய பிறமொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என சுவிட்சர்லாந்து சோசலிச ஜனநாயக கட்சி உறுப்பினரும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான கலாநிதி சிறி. இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேசத்தின் முன் நாம் நீதி கோர வேண்டுமாக இருந்தால் இத்தகைய ஆவண நூல்கள் பிறமொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும்.
ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் அவர்களை எனக்கு நீண்டகாலமாக தெரியும்.
சுவிட்சர்லாந்தில் சர்வசன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்ட போது இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு அதனை தெளிவூட்டும் வகையில் தான் பணியாற்றிய தொலைக்காட்சியில் என்னிடம் செவ்வி ஒன்றை எடுத்து ஒளிப்பரப்பினார்.
அந்த பிரசாரம் எமக்கு பெரும் வெற்றியை தந்தது. சமூக பொறுப்போடு நீண்டகாலமாக ஊடகத்துறையில் பணியாற்றும் அவர் கடந்த காலங்களில் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை அவலங்களை போர்க்குற்றங்களை ஆதாரங்களுடன் கிழக்கில் சிவந்த சுவடுகள் என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்.
காலத்தின் தேவைக்காக அவர் இதனை மிகுந்த பொறுப்புணர்வுடன் எமக்கு தந்திருக்கிறார்.
அவரின் இந்த பணிகளுக்கு என்றும் எனது ஆதரவு இருக்கும்” என்றார்.
மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்
மேலும், சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட தொழிலதிபரும் எழுத்தாளருமான கலாநிதி நாகேஸ்வரன் அருள்ராசா உரையாற்றுகையில்,
“சூரியனால் மட்டும் கிழக்கு சிவக்கவில்லை, இனமோதல்களால் மதமோதல்களால் இயக்க மோதல்களால் பிரதேச மோதல்களாலும் கிழக்கு சிவந்திருக்கிறது.
போரின் வலிகளை மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் வலிகளை ஆதாரபூர்வமாக இந்நூல் பேசுகிறது. இது ஒரு ஆவணம். இந்நூல் அடுத்த சந்ததிக்கும் சென்றடைய வேண்டும்.” என்றார்
நூல் அறிமுக உரையை எஸ்.ஜெயமோகனும், நூல் விமர்சன உரையை ஊடகவியலாளர் புஸ்பராசா அசோக் லூயிஸ் நிகழ்த்தியுள்ளனர்.