இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்இலங்கையின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஏற்கனவே, இந்த திருத்தங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தரப்புக்கள் முன்வைத்தபோது, அதனை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நிராகரித்திருந்தார். 

குறிப்பாக இணைய வழங்குனர்களின் எச்சரிக்கையையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்து இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

சட்டத்தில் திருத்தங்கள்
எனினும், இந்த சட்டம் காரணமாக டிஜிட்டல் தொழில்நுட்ப அபிவிருத்தியில் தடங்கல் ஏற்படலாம் என்றும் அது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் உள்ளூர் மற்றும் வெளியகத் தரப்புக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே தற்போது திருத்தங்களுக்கு அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட்ட தரப்புக்கள் இந்த எச்சரிக்கையை தொடர்ந்தும் விடுத்து வருகின்றன. அத்துடன், இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்போது, உயர்நீதிமன்றின் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை
அத்துடன், சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் சபாநாயகருக்கு விடயம் தெளிவுப்படுத்தப்பட்டபோதும், அவரும் சட்டத்துக்கு சான்றளித்து அதனை சட்டமாக்கியுள்ளார்.

இந்நிலையில், சபாநாயகரின் இந்த செயற்பாட்டை சவால் செய்து உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த சூழ்நிலையிலேயே சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதில், இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள ஒருவர், இலங்கை அரசுக்கு, இராணுவம் உட்பட்ட படைத்தரப்பினருக்கு எதிராகவோ, பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டாலோ அது குற்றமாக கருதப்படும் என்று இணைய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளடங்கியுள்ள அம்சமும் திருத்தப்படவுள்ளது.
புதியது பழையவை