கிளிநொச்சி,குமாரசாமிபுரம் பகுதியில் வீட்டிற்குள் தங்கமா? தேடுதல் பணி ஆரம்பம்கிளிநொச்சி மாவட்டத்தின் குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் பகுதியில் அகழ்வு நடவடிக்கையை முன்னெடுக்க கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தர்மபுரம் பொலிசார், நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கு அமைய குறித்த அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் பொருட்கள் எவையும் கிடைக்காத நிலையில் மேலும் பல பகுதிகளை அகழ்வதற்கு இரண்டாவது நாளாக இன்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில் வீதிகள் மற்றும் குறித்த காணியை சூழ அதிகளவில் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டது.

பொலிசார், சிறப்பு அதிரடிப்படையினர் தடயவியல் பொலிசார், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்களத்தினர், கிராம அலுவலகர் உள்ளிட்ட தரப்பினர் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அகழ்வை பார்ப்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் கூடிநின்ற நிலையில் அவர்கள் உட்செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் குறித்த இடத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.
குறித்த பகுதியில் அமையப்பெற்ற வீட்டின் உட்பகுதியில் விடுதலைப் புலிகளால் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் தற்போது அரைக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதால் வீட்டிற்குள் உள்ள அறையின் ஒரு பகுதியில் சுமார் 4 அடிவரை நேற்று தோண்டப்பட்டது.

எனினும் எதுவும் கிடைக்காத நிலையில் இன்று இரண்டாவது நாளாக கனரக இயந்திரம்கொண்டு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
புதியது பழையவை