கிழக்கில் பொலிஸார் அராஜகம்!




திருகோணமலை - கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வினை இன்று (23-02-2024) தடுத்து நிறுத்தியதால் முருகனை தரிசிக்க சென்ற பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.

மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் தென்னமரவாடி கிராம மக்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வழமை போன்று இன்றைய தினமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.



பௌர்ணமி பொங்கல் விழாவிற்கு கிராம மக்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் உட்பட சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஆயுதங்களுடன் திடீரென குவிந்த பொலிசார்

பொங்கலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலய வளாகத்திற்குள் திடீரென நுழைந்த 100க்கு மேற்பட்ட பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் ஆயுதங்களுடன் வருகை தந்து அங்கு குழுமியிருந்த மக்களை விரட்டினர்.


அதோடு நிகழ்வில் கலந்து கொண்ட சிவில் செயற்பாட்டாளரான திரு. லவகுசராசா அவர்களுக்கும் அவருடன் வருகை தந்திருந்த செயற்பாட்டாளர்களுக்கும் நீதிமன்ற தடையுத்தரவினை வழங்கி அவ்விடத்திலிருந்து வெளியேற்றியிருந்ததுடன் பொங்கலை தடுத்து நிறுத்தி அக்கிராம மக்களையும் வெளியேற்றி கிராம சூழ்நிலையை பதற்றத்திற்குள்ளாக்கினர்.



இச்சம்பவம் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தினுடைய கலாசார மற்றும் மத வழிபாட்டு உரிமையினை மீறும் செயல் என சுட்டிக்காட்டிய சமூக செயற்பாட்டாளர்கள், சம்பவத்தை கிராம மக்களும் சிவில் சமுகங்களும் கண்டிப்பதுடன் இதற்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை