வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்த்த மாணவர்கள்



சிறீலங்கா விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் “நட்பின் சிறகுகள்”என்ற தலைப்பில்,125 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை விமானப்படை முன்னெடுக்கின்றது.இதில் 73 பள்ளிக்கூடங்களை புனரமைக்கும் திட்டமும்,பள்ளிக்கூடங்களுக்கு 73000 புத்தகங்களை வழங்குவதும் அடங்கும்.”நட்பின் சிறகுகளின்” ஒரு பகுதியாக இம்மாதம் ஆறாந் திகதியிலிருந்து பத்தாம் திகதி அதாவது இன்றுவரையிலும் யாழ் முற்ற வெளியில் – Air tattoo 2024 -எயார் டாட்டு 2024 என்ற பெயரில் ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி இடம்பெறுகிறது.

இக்கண்காட்சியில் விமானப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்களும் வான சாகசங்களும் இசை அணிநடைகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. அது ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி என்ற அடிப்படையில் பாடசாலைப் பிள்ளைகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

விமானங்களின் இயக்கங்கள் தொடர்பாக மாணவர்கள் விளக்கம் தருகிறார்கள். மேலும் மாணவர்களுக்கு சிறிது நேரம் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வாய்ப்புத் தரப்பட்டது.மாணவர்களும் உட்பட பெற்றோரும் எனையவர்களும் விருப்பத்தோடு உலங்கு வானூர்திகளில் ஏறிப் பயணம் செய்வதை காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கில் உள்ள வெவ்வேறு பாடசாலைகள் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு ஹெலிகாப்டரில் பறப்பதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது.

அவர்கள் அதை விருப்பத்தோடு அனுபவித்தார்கள். வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்ப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். முதலாவது பறப்பு அனுபவம் அவர்களுக்குப் பரவசமூட்டக்கூடும். ஆனால் இதே வானத்தை அவர்களுடைய பெற்றோர்களும் பெற்றோர்களின் பெற்றோர்களும் பயத்தோடும் பிரார்த்தனைகளோடும் அண்ணாந்து பார்த்த ஒரு காலம் உண்டு என்பதை அவர்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பது?


15ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கு வானம் ஒரு மரணக் கூரையாக காணப்பட்டது.வானில் போர் விமானங்கள் தோன்றும்போது இந்த பிள்ளைகளின் பெற்றோரும் பெற்றோரின் பெற்றோரும் பதுங்கு குழிகளுக்குள் ஓடி ஒளித்தார்கள்.

அவ்வாறு பதுங்கு குழிகளுக்குள் புகலிடம் தேடிய சிலருக்கு பதுங்கு குழியே புதை குழியாகவும் மாறியதுண்டு. யுத்தம் வாழ்க்கையை விடவும் நிச்சயமானது போல தோன்றிய அக் காலகட்டத்தில் சிறீலங்காவின் வான் படை தமிழ் மக்கள் மீது குண்டுகளைப் போட்டது.வானத்தையும் காற்றையும் கிழித்துக்கொண்டு போர் விமானங்கள் தமிழ் மக்களின் தலைகளை நோக்கி குத்திப் பதிந்தன.

பயணிகள் போக்குவரத்து விமானம் ஆகிய “அவ்ரோ” ரக விமானங்களில் இருந்து தொடங்கி சியா மாசற்றி;அன்ரனோவ்; புக்காரா; கிபிர்; சூப்பர்சோனிக்; மிக்; சீனத் தயாரிப்பான Y12 முதலாய் பல்வேறு நாட்டு தயாரிப்புகளும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் கனவுகளையும் குண்டுகளால் பிளந்தன.

ஈழப் போரின் முதலாவது கட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட அவ்ரோ என்று அழைக்கப்படும் பயணிகள் விமானம் பீப்பாய்க் குண்டுகள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட குண்டுகளை வீசியது.சில சமயங்களில் பீப்பாய்களில் குண்டுகளுக்கு பதிலாக மனித மலம் நிரப்பப்பட்டிருந்தது. அப்படித்தான் சீனத் தயாரிப்பான Y12 விமானத்தை தமிழ் மக்கள் சகடை என்று அழைத்தார்கள். மெதுமெதுவாக மிக உயரத்தில் பறந்து போகும் அந்த விமானத்திலிருந்து எவ்வளவு பெரிய குண்டைப் போட முடியுமோ அவ்வளவு பெரிய குண்டு போடப்பட்டது. ஒரு குண்டு ஒரு பெரிய வீட்டை அப்படியே தரைமட்டமாக்கியது.

ஈழப் போரின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளின் போது மிக நவீன குண்டு வீச்சு விமானங்கள் அரங்கினுள் பிரவேசித்தன.அவை காற்றையும் வானத்தையும் கிழித்துக்கொண்டு குத்தி பறந்து குண்டுகளை வீசின.சந்தைகள், சாவடிகள், பாடசாலைகள்,கோயில்கள்,தேவாலயங்கள் என்று பொதுசன இலக்குகளின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அல்லது உடல் உறுப்புகளை இழந்தார்கள். சொத்துக்களை இழந்தார்கள்.

குண்டு வீச்சு விமானங்கள் மட்டுமல்ல, கண்காணிப்பு விமானங்கள் அதாவது வேவு விமானங்களும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் வேவு பார்த்தன.நான்கு கட்ட ஈழப் போர்களின் போதும் வானில் வேவு விமானங்கள் நிரந்தரமாக ரீங்காரமிட்டபடி பறந்தன. குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் வானில் வேவு விமானங்கள் சூரியனைப் போல சந்திரனைப் போல நட்சத்திரங்களைப் போல நிரந்தரமாக காணப்பட்டன.

சோளகக் காற்று பலமாக வீசும் காலங்களில் யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் பட்டங்கள் பறக்க விடப்படும். பிரம்மாண்டமான பட்டங்களில் விண் பொருத்தப்படும்.காற்றில் விண் அதிரும் பொழுது ஒரு வித ரீங்கார ஒலியை எழுப்பும். யுத்தம் இல்லாத காலங்களில் சோழகக் காற்று வீசும் இரவுகளில் பட்டங்களின் விண் ஒலி வானத்தில் நிரந்தரமாக உறைந்து நிற்கும். அதுபோலவே யுத்த காலங்களில் வேவு விமானங்களின் ரீங்கார ஒலி வானில் நிரந்தரமாக உறைந்து நின்றது. இறுதி கட்டப் போரின் இறுதி நாளுக்கு பின்னரும் அது கேட்டது.

சிறீலங்கா விமானப்படை தமிழ் மக்களை வீட்டுக்கும் பதுங்கு குழிக்கும் இடையே கிழிபட  வைத்தது. போரில் குண்டுகளை,துண்டுப் பிரசுரங்களை வீசிய அதே வான் படை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் நல்லூர் தேர்த் திருவிழாவில் பூக்களைத் தூவியது.

அந்தப் போரில் பயன்படுத்தப்பட்ட தொழிநுட்பம் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றது.ஒரு காலம் தமிழ் மக்களைக் கொல்லும் கருவிகளாக காணப்பட்டவை இப்பொழுது கண்காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டிருப்பது ஒரு மாற்றம்தான்.காங்கேசந்துறை வீதியில் அமைந்திருக்கும் “ஃபொக்ஸ் ரிசோர்ட்ஸ்” என்று அழைக்கப்படுகின்ற விருந்தினர் விடுதியில் யுத்தகாலத்தில் வெட்டப்பட்ட  பதுங்கு குழிகள் காட்சிக் கூடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

அந்தக் கட்டிடம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் இருந்த காலகட்டத்தில் அவர்களுடைய பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையகமாக இருந்தது. அந்தக் கட்டடத்துக்கு கீழே பாதுகாப்பான பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் அக்கட்டிடத்தின் உரிமையாளர் அதை  விருந்தினர் விடுதியாக மாற்றியுள்ளார். அங்கிருந்த பதுங்கு குழி ஞாபகச் சின்னமாக ஒரு “ஷோகேஸ் பீசாகப்” பேணப்படுகின்றது. அதன் சுவர்கள் செப்பனிடப்பட்டு,அழகாக்கப்பட்டு,அது ஒர் ஓவியக் கூடமாக, உல்லாசப் பயணிகளைக் கவரும் காட்சிப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கே ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு காலம் துர்க்கனவாகக் காணப்பட்ட பதுங்குழி, இப்பொழுது ஃபொக்ஸ் விருந்தினர் விடுதியில் காட்சிப் பொருளாகப் பராமரிக்கப்படுகின்றது. அது ஒரு விருந்தினர் விடுதியின் விளம்பர உத்தி.

ஆனால் முற்றவெளியில் நடப்பது என்ன? ஒரு காலம் தமிழ் மக்களின் தலைகளின் மீது மலத்தைக் கொட்டிய கொலைக் கருவிகளும் கொலை வாகனங்களும் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருட்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஒரு தொகுதி யுடியூப்பர்கள் அதை ஒளி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த மாற்றம் மேலோட்டமானது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. போர் ஒரு விளைவு.அது மூல காரணம் அல்ல.மூல காரணம் இன ஒடுக்குமுறையாகும். இன ஒடுக்குமுறை எங்கிருந்து வருகிறது? தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறக்கும் பொழுதுதான்.தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்க முற்படும்பொழுதுதான் இன முரண்பாடுகள் ஆயுத மோதலாக மாறின.எனவே போர் ஒரு விளைவு. இன ஒடுக்குமுறைதான் மூல காரணம்.அது இப்பொழுதும் உண்டு. கண்காட்சியில்  கலந்துகொள்ளும் படைப் பிரதானிகளின் பாதுகாப்புக்காக நடுப்பகல் வேளைகளில் பலாலி வீதி நீட்டுக்கும் பிரதான சந்திகளில் படையினர் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.இக்கட்டுரை எழுதப்படுகையில்,வெட்டுக்குநாறி மலையில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு தமிழ்மக்கள் போராட வேண்டியிருக்கிறது.

இன முரண்பாடுகளை நீக்கும் விதத்தில் இனப்பிரச்சினைக்கு இன்றுவரையிலும் தீர்வு வழங்கப்படவில்லை. இப்போதுள்ள ஜனாதிபதி அதை வடக்கின் பிரச்சினை என்று வர்ணிக்கிறார். அவருக்கு முன்பிருந்த கோட்டாபய அதனை பொருளாதாரப் பிரச்சினை என்று வர்ணித்தார். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த 15 ஆண்டுகளின் பின்னரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.அவ்வாறு தீர்வு காணப்படுவதற்குரிய அரசியல் திடசித்தம் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே போரின் மூல காரணங்கள் அப்படியே இருக்கத்தக்கதாக, யுத்தவெற்றியின் நினைவுச் சின்னங்களைப் பேணும் ஒரு படைத்தரப்பு,தனது போர்க்கருவிகளையும் போர் வாகனங்களையும் காட்சிப் பொருட்களாக கண்காட்சியில் வைப்பது என்பது,போர்  தொடர்பான கொடுமையான நினைவுகளை மறக்கச் செய்யும் உள்நோக்கமுடையது.மிலன் குந்தேரா கூறுவதுபோல “அதிகாரத்துக்கு எதிரான மனிதர்களின் போராட்டம் எனப்படுவது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டமே” மாணவர்களுக்கு மறதிக்கு எதிரான ஞாபக சக்தி இருக்க வேண்டும். அது கற்றலுக்கு அவசியம். அதைவிட அவசியம் தமது சொந்த வரலாற்றை மறந்துவிடாமலிருக்க.

ஈழத் தமிழர்கள் தாயகத்துக்கு வெளியே அதிக தொகையில் வாழும் நாடு கனடா.அங்கு இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அது தொடர்பான அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கோடு இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் ஒன்றை அந்த நாட்டின் அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதாவது அடுத்தடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்கு இனப்படுகொலை தொடர்பாக அறிவூட்டப்பட ஓர் ஏற்பாடு. ஆனால் தாயகத்தில் இனப்படுகொலை புரிந்ததாக தமிழ் மக்கள் குற்றம் சாட்டும் ஒரு படைத்தரப்பின் விமானங்களை தமிழ் மாணவர்களே “எங்களுடைய விமானங்கள்” என்று கூறுகிறார்கள். ஆயின், தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்படுகின்றார்களா?

புதியது பழையவை