கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட யுவதி




எல்பிட்டிய, தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் 17 வயதுடைய யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த யுவதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரந்தெனிய, தல்கஹாவத்தை, கங்கபாறை பிரதேசத்தில் வைத்து நேற்று (09-03-2024) முச்சக்கர வண்டியில் வந்த குழு ஒன்றினால் பலவந்தமாக யுவதி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கரந்தெனிய, மந்தகந்த, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நதீஷானி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பொலிஸார் மேலதிக விசாரணை
குறித்த யுவதியின் சகோதரி எல்பிட்டிய மண்ணகந்த பகுதியில் வசித்து வந்த நிலையில், சகோதரியின் இரண்டு குழந்தைகளை பராமரிப்பதற்காக ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர் தனது சகோதரியின் கணவருடன் நெருங்கிய உறவை பேணி வந்ததாகவும், பெப்ரவரி 23ஆம் திகதி மருமகன், தனது இளைய மகளை மீண்டும் வந்து வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றதாக ஹன்சிகாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஹன்சிகா அழைப்பினை எடுத்து வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தன்னைக் காப்பாற்றுமாறு தனது தாயிடம் கூறியதாகவும், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய ஆயத்தமான நிலையில் மகள் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை